"ஏன் நான் வேலைக்கு போகக்கூடாது?", கேட்டாள் சங்கவை
"நீ வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லலியே, தாராளமா போகலாம், ஆனா போறது இப்ப அவசியமா?", கான்டீபனின் குரலில் கரிசனம் தெரிந்தது, "நமக்கு இப்ப என்ன குறைச்சல்? எனக்கு செக்யூரிட்டி, சாட்டிஸ்பாக்சன், ரெம்யூனரேஷன் எல்லாம் நல்லா இருக்க வேலை, வீட்டையும், குழலினியையும் நல்ல விதமா பாத்துக்க நீ, அமைதியான இந்த வாழ்க்கை.... இப்போ எதுக்கு நீ வேற வேலைக்கு போய் கஷ்டப்படனும்?"
"எனக்குன்னு கனவுகள் இருக்காதா? நானும் உங்க அளவுக்கு படிச்சிருக்கேன். என் ஆசை, உணர்வு எல்லாம் காத்தோட காணாம போகனுமா?"
"உன்னோட ஆசையை நான் நிராகரிக்கலை.. ஆனா"
"என்ன ஆனா?", கோபம் தெரிந்தது சங்கவையின் வார்த்தையில்.
"குழலினியை என்ன செய்றது? யார் அவள பாத்துக்கிறது. டே கேர் சென்டர்லயா விட முடியும்", காண்டீபனின் நியாயமான கவலை.
"நான் சொன்னா கோவப்படக்கூடாது.... உங்க அம்மாவை இங்க வரச்சொன்னா"
"என் அம்மாவா.. சரிப்படாது. அவங்களுக்கு நகரமே ஒத்துப்போவாது.. அவங்களுக்கு கிராமத்தில சொந்த பந்தங்களோட வாழறதுதான் நிம்மதின்னு ஒனக்கு தெரியாதா... இது நடக்காது.. அதோட...", காண்டீபன் சற்று இடைவெளி விட்டு மனைவியை பார்த்தான்.
அந்த "அதோட"வுக்கு அர்த்தம் புரியாமல் பார்த்தாள் சங்கவை. காண்டீபனே தொடர்ந்தான், "இவ்வளவு நாள் இல்லாம இப்ப குழந்தைய பாத்துக்க கூப்பிட்டா ஏதோ வேலைக்காரி வேலைக்கு கூப்பிடறோம்னு நினைக்க மாட்டாங்களா?"
"வேலைக்காரின்னு ஏன் சொல்றீங்க.. அவங்களோட பேரப்பிள்ளதானே"
"உன்னோட அம்மாவ கூப்பிட்டா"
"என்னோட அம்மா வந்துட்டா, அப்பாவ யாரு பாத்துக்கறது? தம்பிக்கு யாரு சமைச்சு குடுக்கறது? உங்க அம்மாதான் தனியா இருக்காங்க.. வந்து நம்ம கூட இருந்தா என்ன? குழலினிக்கும் ஓரளவு விவரம் தெரியற வயசு.. அப்பாயி கூட இருந்துக்குவா"
காண்டீபன் எண்ண அலைகளுக்குள் ஆழ்ந்து விட சில நிமிட அமைதி.
"எனக்கென்னவோ இது சரியாப் படலை.. உனக்கு தெரியுமா, நான் பேச்சிலர் ஆக இருக்கும்போது என் கூட இருக்க அம்மாவை கூப்பிட்டப்பவே அவங்க சம்மதிக்கலை. அவங்களுக்கு அந்த கிராமத்தில இருக்கிறதுதான் நிம்மதி. உனக்கு கனவு, ஆசை இருக்கிற மாதிரிதானே அவங்களுக்கும். அவங்க உணர்வுகளை நாம மதிக்காம இருக்கலாமா? என்னால இது முடியாது...."
சிறிது நேர ஆராய்வு, அலசல், வாக்குவாதத்திற்கு பின் தூங்கிப் போனார்கள். அதிலிருந்து சில நாட்களுக்கு இந்த வாதம் பலமுறை நடந்தது. அமைதியாக இருந்த வாழ்வில் தேவையில்லாத புயலொன்று அடிப்பதாக காண்டீபனும், தன் கனவுகள் சிதைந்து போவதாக சங்கவையும் தவிக்க, அவர்களிடம் ஒரு இடைவெளி. எப்போது எது பேசினாலும், அது கடைசியில் இந்த பிரச்சினையிலேயே வந்து நின்றது.
கனவுக்கும், அமைதிக்கும் இடையில் குழந்தையின் நலன் இருவரையும் கட்டிப் போட்டது.
இப்படியாக ஒரிரு வாரங்கள் கடந்து விட காண்டீபன் ஒரு முடிவுக்கு வந்தான்.
------------------------------
"ஏன் இந்த திடீர் முடிவு காண்டீபன்", அவனது சி.இ.ஓ கேட்டார்,"எந்த பிரச்சினையானாலும் சால்வ் பண்ணிடலாம், அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்கக் கூடாது"
"இல்ல கௌஷிக், இது திடீர் முடிவு கிடையாது, நல்லா யோசிச்சு, என் மனைவியோட கலந்தாலோசிச்சு எடுத்த முடிவுதான்.. இதுதான் எனக்கிருக்கும் பிரச்சினைக்கு சரியான தீர்வு.."
"பாருங்க காண்டீபன், நீங்க இந்த கம்பெனியோட அசெட், ஒரு முக்கியமான சொத்து, இந்த கம்பெனியில உங்க ஸ்கோப், கேரியர் பாத் எல்லாம் பக்காவா இருக்கு.... உங்களை அவ்வளோ சுலபமா ரிலீவ் பண்ண முடியாது... ஐ ஏம் சாரி", கௌஷிக்கின் குரலில் கண்டிப்பு, கனிவு, கவலை எல்லாம் கலந்து இருந்தது, “வேணுன்னா நீங்க ஒரு மாசம் லீவ் எடுத்துகிட்டு குடும்பத்தோட ஏதாவது ரிசார்ட்ல தங்கி நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுங்க.. கம்பெனி எல்லா செலவையும் ஏத்துக்கும்..”.
காண்டீபன் தெளிவாக இருந்தான், "இல்ல கௌஷிக், இது என்னோட கடைசி முடிவு. இதை நான் மாத்த போறதில்ல... யூ ஹேவ் டு ரீலீவ் மீ... என்னோட டீம்ல பரிமளா நான் செய்ற எல்லா ஆக்டிவிட்டியிலயும் இன்வால்வ் ஆனதால, நான் இல்லாமலே இந்த புராஜக்டை நல்லபடியா நடத்தி செல்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு. ஒரு ரெண்டு வாரம் நாலெட்ஜ் டிரான்ஸ்பர் போதும்னு நினைக்கிறேன்...." காண்டீபன் பேசிக்கொண்டே போக கௌஷிக் இடைமறித்தார்
"காண்டீபன், இந்த கம்பெனியை விடுங்க.. உங்களோட சொந்த வாழ்க்கை பத்தி பேசுவோம்.. ஒரு நண்பன்கிற முறையில... ம்... வேலையை விட்டுட்டா உங்களோட வருமானம் என்ன ஆகும்? குடும்பத்தை எப்படி நடத்துவீங்க?"
"இது நானும் சங்கவையும் ஏற்கெனவே பேசினதுதான்... சங்கவை இப்போதைக்கு நான் சம்பாதிப்பதில் பாதி கூட சம்பாதிக்க மாட்டாங்க.. ஆனா, ஒரு ரெண்டு வருஷங்களில அவங்களும் நல்லா சம்பாதிப்பாங்க அப்படிங்கற நம்பிக்கை இருக்கு, அதுவரை நான் ப்ரீலான்சா பண்ணலாம்னு இருக்கேன். உங்களோட அக்கறைக்கு நன்றி... டோன்ட் வொர்ரி எபவுட் மீ கௌஷிக்", காண்டீபன் புன்னகையோடு பதில் தந்தான்.
"ஓக்கே தென்... ஐ ரெஸ்பெக்ட் யுவர் டெசிஷன்.. ஆனா எப்போ வேணுன்னாலும் நீங்க இங்க திரும்பி வரலாம்.. வீ ஆர் ஆல்வேஸ் ஓப்பன்...".
-----------------------------------
இப்போதெல்லாம், காண்டீபன் காலையிலேயே எழுந்து சங்கவை துணையுடன் சமைத்து, பின் சங்கவை அலுவலகம் சென்றபின், குழலினியை குளிப்பாட்டி, உணவூட்டி, அவள் அட்டகாசங்களை பொறுத்து அவளுடன் விளையாடி.. காய் வாங்கி, மளிகை வாங்கி, துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து, பால் காரர், கேபிள் காரர், காஸ் காரர், அனைவருடனும் மாரடித்து, டொனேஷன் கேட்டு வருபவர்களிடம் எஸ்கேப் ஆகி..... வாழுகிறான்.
அக்கம் பக்கத்தில் வாழ்பவர், அவனது உறவினர், அவளது உறவினர், அவனுடன் வேலை செய்தவர்கள், அவளது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் காண்டீபனுக்கு வைத்திருக்கும் பெயர்... "ஹவுஸ் ஹஸ்பண்ட்".
-----------------------------------
பி.கு: இந்த கதைக்கு காரணமாக இருந்த ஆழியூரானின் இந்த பதிவுக்கும், அதில் லக்ஷ்மி மற்றும் ரத்னேஷ் ஆகியோருக்கிடையெ நடந்த பின்னூட்ட வாக்குவாதத்துக்கும் நன்றி.
Thursday, January 22, 2009
பளாரென்று ஒரு பெண்விடுதலை கதை
Subscribe to:
Post Comments (Atom)


16 comments:
பிரம்மாதமான கதை, இது மாதிரி கதை படித்து வருஷக்கணக்காகிறது. காண்டீபனைப்போலவே எல்லா கணவன்மார்களும் இருந்துவிட்டால்; அப்பப்பா எவ்வளவு அழகாயிருக்கும் உலகம்.
//அதுவரை நான் ப்ரீலான்சா பண்ணலாம்னு இருக்கேன். //
இதுதான் உதைக்குதேன்னு பார்த்தேன்.
//இப்போதெல்லாம், காண்டீபன் காலையிலேயே எழுந்து சங்கவை துணையுடன் சமைத்து, பின் சங்கவை அலுவலகம் சென்றபின், குழலினியை குளிப்பாட்டி, உணவூட்டி, அவள் அட்டகாசங்களை பொறுத்து அவளுடன் விளையாடி.. காய் வாங்கி, மளிகை வாங்கி, துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து, பால் காரர், கேபிள் காரர், காஸ் காரர், அனைவருடனும் மாரடித்து, டொனேஷன் கேட்டு வருபவர்களிடம் எஸ்கேப் ஆகி..... வாழுகிறான்.//
இங்க இல்லாததால பிழையே இல்லாத கதை என்று சொல்லலாம்.
வாங்க பெரும் காதல் கொண்டவன்.. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி..
Not bad.. good try!!
You need guts to be like Kandeepan... No guy has this guts these days.. :((
நல்ல கதை புபட்டியன். இதே மாதிரியான ஒரு விஷயத்தை வீட்டுக்கு வீடு லூட்டி என்ற தொடரில்(ஜெயா டிவி) முடிந்த அளவு கேவலப்படுத்தியிருப்பார்கள். ஒரு குடும்பத்தில் மனைவி விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்வார். நல்ல வருமானம் என்பதால் அவரது கணவர் வீட்டிலிருப்பார். இந்த சூழ்நிலையில் சாதாரணமாய் ஒரு குடும்பத்தலைவி பேசும்/செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அந்த ஆண் செய்யும்போது பின்னணியில் பலத்த சிரிப்பு ஒலிக்கும் - அது எப்படி ஒரு பெண் செய்யும் போது இயல்பாய்த் தெரியும் விஷயம் ஆண் செய்யும்போது மட்டும் நகைச்சுவைக்குரியதாகிறது என்று எனக்கு புரியவே இல்லை.
//அக்கம் பக்கத்தில் வாழ்பவர், அவனது உறவினர், அவளது உறவினர், அவனுடன் வேலை செய்தவர்கள், அவளது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் காண்டீபனுக்கு வைத்திருக்கும் பெயர்... "ஹவுஸ் ஹஸ்பண்ட்".// பிரச்சனையே வெளியிலிருப்பவர்களால்தான். இத்தகைய நாமகரணங்களும் அனுதாபப் பார்வைகளும்தான் நமது மன உறுதியைக் குலைத்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.
வாங்க லக்ஷ்மி. கருத்துக்கு நன்றி.
நான் வீட்டுக்கு வீடு லூட்டி பார்த்தது இல்லை.. ஆனாலும் அதுபோல சிரிக்க வைக்க முயற்சிப்பது, உடல் ஊனத்தை வச்சு நகைச்சுவை காட்சி அமைப்பது மாதிரிதான். டைரக்டரிடம் சரக்கு இல்லைன்னு சொல்லாம சொல்லுறது.
ஆமாங்க.. 100% சரி, பிரச்சினையே வெளியில் இருப்பவர்கள்தான்..
Fiction..? நல்லாதான் இருக்குப் படிக்க..? ஆனால், லட்சுமி சொல்வதைப்போல இதை கருத்து ரீதியாக ஏற்றுக்கொள்ளவே நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
வாங்க ஆழியூரான். கருத்துக்கு நன்றி
ஆமாங்க, என்னோட சொந்த வாழ்க்கையிலே இது போல நினைச்சு பாக்கறது கஷ்டம்தான். ஆனாலும் இது எழுத தோணினதுக்கு காரணம், ஏன் இப்படி இருக்கக் கூடாதுங்கற கேள்விதான்.
நண்பரே, இணைய தளப் பிரச்னை தீர்ந்ததும் என் கண்ணில் பட்ட முக்கியப் பதிவு தங்களுடையது தான். தங்கள் கதையின் பின்குறிப்பு இல்லாவிட்டாலும் நான் இதற்குப் பின்னூட்டமிட வந்திருப்பேன். (அது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது; அதோடு அப்படிப்பட்ட மனது உள்ளவர்களால் தான் இப்படிப்பட்ட கதையை யோசிக்கவாவது முடியும்). எனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவர் நான்கைந்து வருடங்களுக்கு முன் (சுமார் நாற்பதாயிரம் மாத சம்பளம் வாங்கி வந்தவர்) திருமணத்திற்குப் பெண் தேடிய போது வேலைக்குப் போகாத பெண் வேண்டும் என்று தேடினார். இருவர் சம்பாதிக்கும் வீடு, போர்டிங் வசதி உள்ள பெரிய லாட்ஜ் என்பது அவருடைய அழுத்தமான எண்ணம். நன்கு பொருத்தமாக அமைந்து வந்த இரண்டு பெண்கள் வீட்டார், அவர்களின் பெண்கள் வேலைக்குப் போவதையும் முப்பது முப்பத்தையாயிரம் சம்பாதிப்பதையும் அதனை விட முடியாது என்பதையும் மட்டுமே தடைக் காரணங்களாகச் சொன்ன போது தங்களின் காண்டீபனைப் போலவே தான் அவர் சொன்னார்: "எனக்கு நன்கு சமைக்கத் தெரியும்; நல்ல தாயிடம் வளர்ந்தவன் பொறுப்பாக வீட்டினை நிர்வகிக்க முடியும். எந்தவித காம்ப்ளக்ஸும் இன்றி வீட்டில் இருந்து நிர்வகித்துக் கொள்கிறேன்; நான் வேலையை விட்டு விடுகிறேன். உங்கள் பெண் சம்பாதிக்கட்டும்" என்று. இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்கள். ஒரு பெண் சொன்ன (இன்னொருவர் சொல்லாத) காரணம்: "அவருக்கு வீட்டில் இருப்பது குறித்து காம்ப்ளக்ஸ் இல்லாமல் இருக்கலாம்; எனக்கு என் கணவர் என்னளவாவது சம்பாதிக்கவில்லை என்றால் கௌரவக் குறைச்சல்"
RATHNESH
வாங்க ரத்னேஷ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//இருவர் சம்பாதிக்கும் வீடு, போர்டிங் வசதி உள்ள பெரிய லாட்ஜ் என்பது அவருடைய அழுத்தமான எண்ணம். //
இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூட இது போன்ற எண்ணம் உடையவர்னு சொல்லியிருக்கார் (ஆனால், ஏன் அவர் வீட்டில் இருந்து கொண்டு சுதா அவர்களை வேலைக்கு அனுப்பலைன்னு யாரும் அவரிடம் கேட்டதில்லை போலும்).
//"அவருக்கு வீட்டில் இருப்பது குறித்து காம்ப்ளக்ஸ் இல்லாமல் இருக்கலாம்; எனக்கு என் கணவர் என்னளவாவது சம்பாதிக்கவில்லை என்றால் கௌரவக் குறைச்சல்"//
இது பெண்களே போட்டுக்கிற முட்டுக்கட்டைதான். (ஆனால் இந்த IT காலத்தில் பெண்கள் கொஞ்சம் மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.)
கடைசியில் என்னதான் செஞ்சார் உங்க நண்பர்?
அச்சா! IT பெண்கள் மாறிவிட்டார்களா? என் நண்பரை நிராகரித்த இருவருமே அந்த இனத்தினர் தான். என் நண்பர், தனக்கு 'ஏதாவது' ஆகிவிட்டால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொருட்டு பணி செய்யத் தகுதியுள்ள படிப்புடன் தற்போது வேலைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டாத ஒரு பெண்ணை மணந்து கொண்டு 'லாட்ஜ் வாசி'களான நண்பர் தம்பதியரின் வார இறுதிப் புகலிடமாகத் தன் இல்லத்தை ஆக்கி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஒரு குழந்தையுடன்.
RATHNESH
எந்த எழுத்துக்கும் முக்கியமானது அவற்றை எழுதும் அழகு; படிப்பவருக்கு போரடிக்காமல் அவரைத் தன்னுடன் கூட்டிச் செல்லல்; அவரை பத்து
நிமிஷமாவது தொடர்ந்து தன்னுடன்
இருத்தி வைத்துக் கொள்ளல்--
இந்தத் திறமை உங்களுக்கு சந்தேகமில்லாமல் இருக்கிறது.
நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றி ரத்னேஷ்
//அச்சா! IT பெண்கள் மாறிவிட்டார்களா? //
அப்படித்தான் நான் நினைக்கிறேன். எனது இந்த Observation சரியா, தவறா என தெரியவில்லை.
நன்றிஜீவி
//இந்தத் திறமை உங்களுக்கு சந்தேகமில்லாமல் இருக்கிறது.
நிறைய எழுத வாழ்த்துக்கள்//
பாராட்டுக்கு நன்றி.. தொடர்ந்தும் முயல்கிறேன்.
மீள் பதிவு???
//மீள் பதிவு???//
ஆமாம் விக்கி. வருகைக்கு நன்றி...
நல்ல கதை. சிந்திக்க வைக்கிறது.
பெண்ணும் வேலைக்குப் போயாக வேண்டிய நிலையில் தற்காலத்துத் தேவைகள் இருக்க சில விட்டுக்கொடுப்புகளை இருவரும் செய்வது சிறந்தது.
சாந்தி
Post a Comment