அன்று என் அலுவலக ஆண்டு விழா. மற்ற விழாக்களை போலில்லாமல், நானூறு வருடங்களாக தொடர்ந்து நடந்து வருவது என்பதால் மட்டும் நான் அங்கு போக நினைக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பவர் என் அபிமானத்துக்குரிய கருப்பு பணத் துறை அமைச்சர் திரு. காத்தவராயன் என்பதுதான் அந்த காரணம்.
காத்தவராயன் நேரடியாக மூன்று லட்சம் பேரை கொன்றது மட்டுமில்லாமல், மறைமுகமாக முப்பது லட்சத்தை போட்டுத் தள்ளியது மட்டுமில்லை அவரை எனக்கு பிடித்துப் போனதற்கு காரணம். அவர் வந்தபின்தான், ஆயிரம் கோடியாக இருந்த கருப்பு பணம், பல்லாயிரம் கோடியாக உருவெடுத்தது.
மாலை ஏழு மணிக்கு நடக்கவிருக்கும் விழாவுக்கு காலை ஐந்தரை மணிக்கே சென்று விட்டேன். வீட்டில் செய்யும் பல் துலக்குவது, கக்கூஸ் போவது, குளிப்பது எல்லாவற்றையும் அங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான்.
விழாத் திடலை நெருங்கும்போது அலை அலையாக மக்கள் திரண்டு இருந்தனர். நான் சென்று வரிசையில் நின்று கொண்டேன். வரிசையில் எனக்கு முன்னால் பத்து லட்சம் பேர் இருந்தனர். “கிடேரோ” கிரகத்தின் ஏவுகணைப் படைதான் காவலுக்கு நின்று கொண்டிருந்தது. இவ்வளவு மக்கள் இருப்பதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமா என எனக்கு சந்தேகம் வந்தது. உடனே என் ஒலிபெருக்கியை எடுத்து, சத்தமாகவே கேட்டு விட்டேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஏவுகணைப் படையின் துணை தளபதி, தன் ஒலிபெருக்கி மூலம் கடந்த இருநூறு வருட அனுபவத்தில் இந்த விழாவில் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை என்றார்.
எனக்கு அந்த விழாவுக்கோ, இந்த பதிவுக்கோ சம்பந்தமே இல்லாமல், பிரியாணி பொட்டலங்களும், ஆட்டு மந்தைகளும் நினைவுக்கு வந்தன.
உள்ளே சென்று அமர்ந்ததும், பக்கத்தில் இருக்கும் ஒருவரை பார்த்த ஞாபகம் வந்தது. என் சோப்பு டாப் (சோப்பு டப்பா சைசில் லேப் டாப்) எடுத்து அவரை ஸ்கேன் செய்தேன். சமீபத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் "மடார் மடார்" கிரகத்தில் அவரை பார்த்தது அதில் வந்தது. அவரும் என்னை ஸ்கேன் செய்திருப்பார் போல. இருவரும் கொஞ்ச நேரம் பல்புராயன் புகழ் பாடினோம்.
விழா சரியாக இரண்டேமுக்கால் நொடி முன்னமாகவே ஆரம்பித்தது. முதலில் கேள்வி பதில் அரங்கம். பல்புராயன் தலை எல்லாம் பல்பாக வந்து PA சிஸ்டம் முன் நின்றார். கேள்விக்கணைகள் தொடுக்க ஆரம்பித்தனர். பல்புராயன் எல்லா கேள்விகளுக்கும் நேர்த்தியாகவும் நகைச்சுவை பொங்கவும் பதில் அளித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்த்து. அப்போது என் சோப்டாப்பில் ஒரு மெசேஜ் வந்தது.
"நீங்களும் கேள்வி கேட்க வேண்டுமா? அப்படியானால் அடுத்ததாக இந்த கேள்வியை கேட்கவும்.
அண்டம் கண்டம் எல்லாம் தாவி வந்த பிண்டத்தை பண்டம் செய்ய சொல்வதில் என்ன நியாயம்?"
எனக்கு கேள்வி சுத்தமாக புரியவில்லை. ஆனாலும் கேட்டு வைத்தேன். அதற்கு பல்புராயன்,
"அண்டம் கண்டம் கடந்து வந்தால் பிண்டம் முண்டம் ஆகி விடுமா?" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்ததும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பிளந்த விண்ணில் இருந்த மேகங்கள் குளிர்ந்து ஒரு துளி நீர் என் மேல் விழுந்து என் மேனி முழுதையும் நனைத்தது. நான் குளிரில் நடுங்கினேன்.
அடுத்த கேள்வியாக ஒருவர், "மனிதன் மதமதாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றதும். "மதமதா எப்போது மனிதன் ஆனார்" என்றார் பாருங்கள் பல்புராயன், சிரிப்பில் வானமே உடைந்தது. உடைந்த வானத்தின் வழியே சூரியன் எட்டிப் பார்த்து என் உடலை காய வைத்தான். நான் மகிழ்ந்தேன்.
அடுத்து காத்தவராயன் பேசினார். அவரது பேச்சில் அர்த்தமே இல்லாவிட்டாலும், நாகரிகமாக கை தட்டினோம். அவர் அப்படி அர்த்தம் இல்லாமல் பேசியது அவர் மேல் என் அபிமானத்தை மேலும் கூட்டியது.
வெளியில் வந்ததும், பல்புராயனின் காமெடி நேனோ சிப்கள் விற்பனைக்கு இருந்தன. சும்மான்னாலும் பந்தாவுக்காக அதை எல்லோரும் வாங்கினர். ஆக மொத்தத்தில், ஒரு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இது எடுத்துக்காட்டா?
Tuesday, February 12, 2008
மோடியும் சோவும் : கோடியும் ஜோவும் : காத்தவராயனும் பல்புராயனும்
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
இது ஒரு மொக்கை அவ்வளவே
”சமீபத்தில்” நான் படித்த நல்ல வஞ்சப்புகழ்ச்சி அணி மொக்கை இது.
நன்றி இசை. ஏதோ தோணினதை எழுதினேன்.
இந்த சமீபத்திய பதிவினை நான் வரவேற்கிறேன். :)
Post a Comment