Monday, June 9, 2008

மனோரஞ்சன் கா பாப், பிஜிலி கோ பச்சாவோ, வோடாபோன் சோட்டா கிரெடிட்

தேர்வு (பரிட்சை) நடக்கும் நேரம். கடைசி சில நொடிகளே மிஞ்சியிருக்கும் நேரத்தில், ஒரு மாணவியின் பேனா மை தீர்ந்து விடுகிறது. மீண்டும், மீண்டும் எழுத முயற்சிக்கிறாள். ம்ஹூம்.. பேனா ஒத்துழைக்க மறுக்கிறது. தூரத்திலோ, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் தேர்வுத் தாள்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் டென்ஷன், கவலை. அவளின் பின்னால் சர்வ அலட்சியமாக அமர்ந்து ஏதோ எழுதும் ஒரு சிறுவன் இதை கவனிக்கிறான். அவன் இருக்கையிலிருந்து எட்டி பேனாவை நீட்டி, அவளது மேசை மீது ஒரு துளி மையை வைக்கிறான். அவள் பேனா அந்த மையை உறிஞ்ச, அப்புறம் என்ன... அவள் அழகுற புன்னகைக்க அவனோ, “இதெல்லாம் சகஜமப்பா” என்ற சைகையுடன் வெகுளிச் சிரிப்பு சிரிக்க.. வோடாபோன் சோட்டா கிரெடிட்.

இந்த காலத்தில் யாருங்க மை பேனா பயன்படுத்தறாங்க, எல்லாம் பால்பாயிண்ட்தானே?”,

என்னப்பா, தேர்வுக்கு போற பொண்ணு ஒரு எக்ஸ்ட்ரா பேனா கூடவா கொண்டு போகாது?

இது போன்ற கேள்விகளையும் மீறி ஜம்மென்று மனதில் அமர்வதற்கு காரணம், விளம்பரத்தின் இயல்பான போக்குதான். வெகு இயல்பான உணர்வுகள், அந்த பெண்ணுக்கும், பையனுக்கும் இடையில் நடக்கும் இந்த சுவையான சம்பவத்தை விளம்பரத்தில் வரும் வேறு யாரும் பார்க்காமல் இருப்பது, இயல்பை மேம்படுத்திகிறது. அதுவும் குளோஸப்பில் காட்டப்படும் அந்த பேனா முனை (நிப்) அழகுக்கு அழகு சேர்க்கிறது.

நீங்களும் பாருங்க


என்னை கவர்ந்த மற்றுமொன்று. Havells மின் விசிறி விளம்பரத்தில் வரும், கவர்ச்சி ஆட்டக்காரி பிஜிலி களைத்து கீழே விழுகிறார். சுற்றியுள்ள அனைத்து “நல்ல மனது” படைத்த ஆண்மகன்கள், “பிஜிலி கோ பச்சாவோ” என்று கத்த “பங்கா” (மின் விசிறி) சுழல விடப் படுகிறது. ரெட்டை அர்த்தத்தை அழகாக பயன்படுத்திய விளம்பரம். இதை தமிழ்படுத்த முடியாது என்று எனக்கு தோண்றுகிறது. தமிழ்படுத்தினால், அந்த பெண்ணுக்கு, “மின்சாரம்” என்று பெயர் வைக்க முடியுமா..

இதே போல்தான் “மனோரஞ்சன் கா பாப்”. மிக நீளமாக, அந்த கால “அமர் அக்பர் அந்தோணி” டைப் இந்தி திரைப்படம் போல ஆக்கப்பட்டிருக்கும், இது “பொழுதுபோக்குக்கெல்லாம் அப்பன்” ஆன IPL விளம்பரம். ஆனால் இதை தமிழ்படுத்தியபோது, அந்த பஞ்ச் கிடைக்கவில்லை.

பெரும்பாலும் நகைக்கடை விளம்பரங்கள் எரிச்சல் மூட்டுவதாகத்தான் இருக்கும், ஆனால், “ஈடில்லா, இணையில்லா.. நாதெல்லா” விளம்பரம் அந்த ரைமிங்குக்காக பிடிக்கிறது. அதேபோல், “நிச்சயமாய், நிச்சயமாய்... கஸானா” என ச்சப்பக்கென்று ஒட்டிக் கொள்ளும் பாடல் கஸானா விளம்பரத்தின் பலம்.

விளம்பரங்களுக்கு மத்தியில் சிறிது நிகழ்ச்சியும் காட்டப்படும் இந்த தொல்லைக்காட்சி யுகத்தில், விளம்பரங்கள் முதல் பார்வையிலேயே மனதை கவருவதாக இருத்தல் நலம். இல்லையேல், ரிமோட்டே கதி.

8 comments:

PPattian : புபட்டியன் said...

தொல்லைக்காட்சியில் குளோஸப்பில் காட்டப்படும் அந்த பேனா முனை, இந்த யூட்யூப் விளம்பரத்தில் மிஸ்ஸிங்....ங்கே..

அதிஷா said...

அந்த வோடபோன் விளம்பரத்தின் இறுதியில் அந்த பையன் ஒரு பெருமித்தோட சிரிப்பான் பாருங்க வாய்ப்பே இல்ல...

சமீபத்துலயே ரொம்ப அருமையான விளம்பரம் அதுதான்

நான் இத பத்தி எழுதலாம்னு இருந்தேன் முந்திகிட்டீங்க

பிரேம்ஜி said...

ரசனையா எடுத்திருக்காங்க.

கப்பி பய said...

பகிர்வுக்கு நன்றி தல!! ரொம்பவே நல்லாருக்கு!

இந்த வீடியோவைப் புடிச்சுக்கிட்டே போய் அரை மணி நேரத்துக்கு மேல விளம்பரங்களா பார்த்துட்டிருக்கேன் :))

PPattian : புபட்டியன் said...

வாங்க அதிஷா

//நான் இத பத்தி எழுதலாம்னு இருந்தேன் முந்திகிட்டீங்க//

நானும் ரொம்ப நாளா எழுதணும்னு நெனச்சு கடைசியில நேத்துதான் முடிஞ்சது.. எப்படியோ முந்திகிட்டேன்..

வாங்க பிரேம்ஜி

//ரசனையா எடுத்திருக்காங்க.//

நெஜமாவே..

வாங்க கப்பி

//இந்த வீடியோவைப் புடிச்சுக்கிட்டே போய் அரை மணி நேரத்துக்கு மேல விளம்பரங்களா பார்த்துட்டிருக்கேன் :))//

நீங்க இப்பதான் முதல் தடவை பாக்கறீங்களா? எனக்கும் இந்த (கெட்ட?) பழக்கம் இருக்கு. ஒரு விடியோவில தொடங்கி.. நான் - ஸ்டாப்பா பாத்துகிட்டே இருக்கறது.

கிரி said...

பொதுவா வோடா போன் (முன்பு ஹட்ச்)விளம்பரங்கள் மிக சுவாரசியமாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று.. எனக்கு இதை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி.

ச்சின்னப் பையன் said...

வீட்டுக்குப் போய்தான் யூட்யூப் பாக்கணும்.. நீங்க சொன்னதை பார்க்கும்போது அந்த விளம்பரம் நல்லா இருக்கும்ணு தோணுது!!!

VIKNESHWARAN said...

இது ஒரு விளம்பர பின்னூட்டம்...