“நீங்கள் படிப்பதற்காக ஒரு ஆவணம் காத்திருக்கிறது”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.
ஆழ்ந்த எண்ணத்தில் இருந்த சுமேதன் நிமிர்ந்து பார்த்தான், “தலைப்பு”, என்றான்.
“ரெமேரோ காங்கிரஸ் அறிக்கை” என்றது சிஸ்டம்.
தனது மணிக்கட்டு பட்டை மூலம் காற்றில் அவன் முன் ஒரு விர்ச்சுவல் விண்டோ திரையை ஏற்படுத்தி, ரெமேரோ அறிக்கையை திறந்தான். பல நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கை அது. முழுதும் ஆங்கிலத்தில் இருந்த்து.
“தமிழ்ப்படுத்து........ சுருக்கு”, என்றான்.
சுருக்கமான தமிழ் அறிக்கை அவன் திரையில் தோன்றியது. அதன் வரிகள் ஒவ்வொன்றாக படிக்க முனைந்தான். ஆனால், அதில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டான். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாலும், கண்ணாடி வழியே வெளியில் தெரிந்த வெயில் சுட்டெரிப்பது போல உண்ர்ந்தான்.
சென்னை ஏப்ரல் மாதங்களில் சாதாரணமாக 60 டிகிரி செல்சியஸஸ தொடும் வெயில் நிறைந்த காலம் அது. கி.பி. 2084. எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி என எதற்குமே இன்னும் கூட முழுமையான மருந்து கண்டுபிடித்தபாடில்லை.
உலகமே ஒற்றைச் சொல்லால் உறைந்து போயிருந்தது. முடிவு நெருங்கி விட்டதாக ஜோதிடர்கள் நம்பிக்கையுடன் கூறினர். உலகையே உலுக்கிய அந்த ஒற்றைச் சொல் அமெரிக்காவோ, அணுகுண்டோ, தீவிரவாதமோ, தற்கொலை தாக்குதலோ.. ஏன் எயிட்ஸோ கூட இல்லை. அந்த சொல் “ரெமேரோ” (Rhe-Mae-Rho).
சுமேதன் அறிக்கையின் முதல் வரிகளைப் படித்தான்
1. ரெமேரோவின் முதல் பாதிப்பு தெரிய வந்தது 2082 டிசம்பரில் பிலிப்பைன்ஸ் நாட்டில் Rhe Mae Rho என்பவர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்தபோதுதான்.
2. இந்த வைரஸ் இருவேறு வகைகளை உடையது (Two variances).
நிமிர்ந்து அமர்ந்தான் சுமேதன். எண்ணக் கடலில் ஆழ்ந்தான்.
வழக்கம்போல அமெரிக்கா மற்றும் மேலைத்திய நாடுகளின் உயிரியல் ஆயுத ஆராய்ச்சியின் பக்க விளைவுதான் இந்த ரெமேரோ என வளரும் (அப்போதும்!) நாடுகளும், தீவிரவாதிகளின் சதிதான் இது என அமெரிக்க நட்பு நாடுகளும் கோஷம் போட்டாலும், உலகமே ஒன்றுபட்டு இதனை போராட வேண்டிய சூழ்நிலை. இல்லையேல், உலகம் என்ற கோட்பாடே காணாமல் போகக் கூடும்.
உலகின் முதல் ரெமேரோ காங்கிரஸ் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. சர்வ தேசங்களிலும் உள்ள அனைத்து தலை சிறந்த அறிவியலாளர்களும் கூடி மண்டையை உடைத்து அதன் முதன் அறிக்கையை வெள்யிடப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த அறிக்கைதான் இப்போது சுமேதனின் திரையில்.
சுமேதன் மறுபடியும் அறிக்கையை நோக்கினான்
3. முதல் வகை, Rhe-Mae-Rho-S அல்லது Rhe-Mae-Rho-Simple இது ஆளைக் கொல்லக் கூடியது அல்ல. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுதும் இந்த வைரஸை சுமந்து கொண்டு இருக்க வேண்டும்.
4. இரண்டாவது Rhe-Mae-Rho-X அல்லது Rhe-Mae-Rho-Extreme. இது கொடியது. முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டவர் எந்தவித அடையாளமும் காட்டாமல் சாதாரணமானவராக காணப்படுவர். ஆனால், பதின்மூன்றாம் மாதத்தில் உருக்கி.. ஒவ்வொரு பாகமாக செயலிழக்க வைத்து உயிரை பறித்து விடும்.
5. ரெமேரோ பரவுவதற்கு காரணம் உடலுறவு. உடலுறவு மட்டுமே.
இந்த வரிதான் சுமேதனை சங்கடப்படுத்தியது. எட்டு மாதங்களுக்கு முன்னால் அலுவல் நிமித்தமாக ஐரோப்பா சென்றிருந்தபோது நடந்த சம்பவம்தான் அவனை அலைக்கழித்தது. அன்று கொஞ்சமான மரிஜூவானா மயக்கத்தில், சக ஊழியர்கள் வற்புறுத்தலுக்குப் பின் ஒரு பாலியல் தொழிலாளியிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டது மனதின் மூலையில் நின்று அரித்தது.
அப்போது ரெமேரோ குறித்த அவனது விழிப்புணர்வு சொற்பத்திலும் சொற்பமே. அத்தனைக்கும் அவன் முறையாக ஆணுறை அணிந்தே செயலில் ஈடுபட்டான்.
அறிக்கை நீண்டது அவனது எண்ண ஓட்டத்தை கலைத்தபடி
6. லேட்டக்ஸ் , பாலியூரோத்தின் முதற்கொண்டு நவீன பைபர் ரக ஆணுறை வரை எதுவும் இதை தடுக்க வல்லது கிடையாது.
7. ரெமேரோவினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாதிக்கப்படாத ஒருவர் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் அவருக்கு 20% சதவீதம் ரெமேரோ-S தாக்கும் வாய்ப்பும், 80% சதவீதம் ரெமேரோ-X தாக்கும் வாய்ப்பும் உள்ளது.
8. ரெமேரோ (ஏதாவது ஒரு வகை) உள்ளவர் இன்னொரு ரெமேரோ நோயாளியுடன் உறவு கொளூம் பட்சத்தில் அவரில் ஒருவருக்கேனும் ரெமேரோ-X இருப்பின் மற்றவருக்கும் அந்த X மாற்றம் ஏற்பட 90% சதவீத வாய்ப்பு உள்ளது.
“அய்யோ”, என தலையில் அடித்து கொண்டான் சுமேதன். அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.
------------------------------------------------------------------------------
“வணக்கம்”, என சமீரா மெசஞ்சர் திரையில் தோன்றினாள்., “ஹேய், ஏன் சோர்வாயிருக்க என்றாள்?”
“ஒன்றுமில்லை.. கொஞ்சம் அசதி” என்றான்.
“இங்க என் வேலை முடிஞ்சிருச்சி... இன்னைக்கு இரவு நான் வீட்டுக்கு வருவேன்”
“என்ன நேரம்?”
“பத்து மணிக்குள்ள வந்துருவேன்”
“சரி.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”
“சரி, வேலை முடிந்ததும் நல்லா தூங்கு, இரவு உன்கிட்ட நிறைய பேச வேண்டும்”, என்றாள்.
“வணக்கம்”, என்று கூறியபடியே மறைந்தாள்.
சமீராவுக்கு செய்த துரோகம் ஒரு பக்கம் குத்தினாலும், அதைவிட “ரெமேரோ” அவனை உயிருடனே கொன்றது.
சிஸ்டத்தில் தொலைபேசி சானலை தெரிவு செய்தான்.
“யார்” என்றது சிஸ்டம்
“ஆஷா மருத்துவ ஆலோசகம்”
சில நொடிகளில், “வணக்கம், ஆஷா ஆலோசகம்” என்றது திரையில் தோன்றிய உருவம்.
“வணக்கம், எனக்கு ரெமேரோ பரிசோதனைகள் பத்தின தகவல் வேணும்”
“ஒரு நொடி பொறுங்க” என்ற மறு நொடியில் திரையில் வேறொரு உருவம் தோன்றியது.
“வணக்கம், ரெமேரோவுக்காக இரண்டு பரிசோதனைகள் செய்யப்படுது. முதலாவது, “இம்ப்ரொவைஸ்டு எலிசா பரிசோதனை வெர்ஷன் 83”. இதன் மூலம் ரெமேரோ தாக்கம் உங்களுக்கு இருக்குதான்னு தெரிய வரும். இதற்கு ஆகும் செலவு, அறுபதாயிரம் ரூபா. நீங்க இப்போ உங்கள் ரத்த மாதிரியை கொடுத்தால் இன்று மாலை 5.30 க்குள்ள உங்க அறிக்கை உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்”
“அதில் எந்த வகை ரெமேரோ என தெரிய வருமா?”
“இல்ல, ரெமேரோவின் வகையை அறிய “லீனியர் ரெமேரோ டெஸ்ட்” அல்லது LRT என்று ஒரு பரிசோதனை உள்ளது. அதற்கு ஆகும் செலவு இரண்டு லட்சத்து முப்பதாயிரம். ஆனா அதன் முடிவு உடனே தெரிய வராது. நாங்க உங்க மாதிரியை ஜப்பானுக்கு அனுப்பியே இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும். அது மட்டுமில்ல இந்த சோதனையின் முடிவு தெரியவர நான்கு மாதங்கள் ஆகலாம்”
“நான்கு மாதங்களா? ஏன் அவ்வளவு நாள்?”
“உலகம் முழுதும் பல கோடி பேர் இந்த பரிசோதனையை செய்ய பதிஞ்சிருக்காங்க. ஆனா, இது செய்ய ஆய்வு வசதிகள் வெகு சில இடங்களிலதான் இருக்கு. இந்தியாவில ஒண்ணு கூட இல்லை.
“ஓ.. சரி என் ரத்தத்தை எடுத்துக்கங்க.. முதல் பரிசோதனை மட்டும் செய்யுங்க. தேவைப்பட்டா, அப்பறமா இரண்டாவது செய்யலாம்.
“எங்க குருதி மாதிரி சேகரிக்கும் வண்டி, இன்னும் அரை மணியில உங்க வீட்டு முன் நிற்கும்.. நன்றி”
------------------------------------------------------------------------------
சுமேதனுக்கு சாப்பிடவோ, தூங்கவோ எதுவுமே செய்ய பிடிக்கவில்லை. எப்படியும் ரெமேரோ இல்லை என அறிக்கை வரும் என்று சமாதானமடையவும் முடியவில்லை. அப்படியே சாளரத்தை வெறித்தபடி நாற்காலியில் சாய்ந்தான்.
மணித்துளிகள் வெகு மெதுவாக நகர்ந்தன. சிஸ்டத்தின் அனைத்து சேனல்களையும் அணைத்து விட்டு, தொலைக்காட்சி சேனலை மட்டும் ஓடவிட்டான். அதில் “ரெமேரோ” என்று தேடினான். “இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்” என்று தெரிந்தது. அவை என்னென்ன என்று பார்த்தான். ஒன்று காங்கிரஸின் அறிக்கை குறித்த செய்தி. மற்றது ரெமேரொ குறித்த ஒரு கலந்துரையாடல்.
சப்டைட்டில் என அழைத்து “தமிழ்” என தெரிவு செய்தான்.
நாப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார், “இன்னும் பத்து ஆண்டுகளில் உடலுறவு என்பதே இல்லாதொழிந்து விடும்”
“அதோடு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரெமேரோ இருக்கும் பட்சத்தில் அவர் குழந்தைக்கு 80% வகை X தாக்கவும், 15% வகை S தாக்கவும் வாய்ப்பு உள்ளது. அதாவது 5% தான் அந்த குழந்தை சாதாரண குழந்தை ஆக வாய்ப்புகள் உள்ளன”
“ஏற்கெனவே உலகின் கால் பங்கு மக்கள் ரெமேரோவின் தாக்கத்தில் இருப்பதால், குழந்தை பெறுவதும் நின்று விடும்”
“ச்சே..” என்றபடி சேனலை நிறுத்தினான். படுத்துக் கொண்டான். அழுத்தத்தில் அப்படியே உறங்கிப் போனான்.
------------------------------------------------------------------------------
“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”
“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”
“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.
சட்டென்று விழித்தான் சுமேதன். கண்களை கசக்கிக் கொண்டான். திரையை உயிர்ப்பித்து ஒவ்வொன்றாக பார்த்தான். அவன் எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்திருந்தது. உடல் முழுதும் பதட்டம் பற்றிக்கொண்டது. தன் வாழ்நாளில் இப்படி ஒரு போதும் நடுங்கியதில்லை என தோன்றியது. அவசரமாக திறந்தான். கண்கள் சோதனை முடிவு காணப்பட்ட இடத்திலேயே நிலை குத்தியது.
“Rhe-Mae-Rho POSITIVE”, என்றிருந்தது முடிவு. சுமேதன் நிலைகுலைந்தான். சொல்லாத இடம் கூட வியர்த்தது அவனுக்கு. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். சுதாரித்தான். நடந்தது நடந்து விட்டது. அடுத்தது என்ன?
LTR செய்தால் அவனுக்கு இருப்பது எந்த வகை என தெரிய வரும். ஆனாலும் அதற்காக நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஐரோப்பா அசம்பாவிதத்துக்கு பின் எட்டு மாதங்கள் கழிந்து விட்டன. X ஆக இருக்கும் பட்சத்தில் அவனது மரணப்படுக்கையில்தான் சோதனை முடிவு தெரிய வரும்.
சொல்லலாமா? வேண்டாமா?.. சமீரா அவன் மனக்கண் முன் வந்து வந்து சென்றாள். சுமேதன் யோசித்தவாறே இருந்தான்.
------------------------------------------------------------------------------
வெள்ளை நிற நைட்டியில் ஒரு தேவதை போல் கட்டிலில் சாய்ந்திருந்தாள் சமீரா. எப்படி இவளிடம் சொல்வது என்கிற தவிப்பு சுமேதனுக்கு.
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“ஹே.. நான்கூட முக்கியமான விஷயம் சொல்லணும்..”, கண்ணடித்தாள் சமீரா
தயங்கினான் சுமேதன், “நான்.. சொல்லப்போறது மிக மோசமான சேதி”
“ம்.. ஓக்கே நீயே சொல்லு”
சுமேதனால் அவள் முகத்தை, அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. ஒரு புழுவைப்போல் உண்ர்ந்தான். “இன்னைக்கு நான் ரெமேரோ சோதனை செய்து கொண்டேன்”
சமீரா அதிர்ச்சியுடன் அவன் கண்களை கூர்ந்து பார்த்தாள்
“நான்.. நான் ரெமேரோ பாசிட்டிவ்”
“ஹேய்.. என்ன இது.. உன் நகைச்சுவைக்கு ஒரு எல்லை இல்லையா? சும்மா என்னை பயமுறுத்தாதே”
“இல்ல.. நான் சொல்வது உண்மை..இது.. இது விளையாட்டில்ல”
“எப்படி.. எப்படி இது? ஏன்?”
“போன ஆகஸ்ட்டில் என்னோட ஐரோப்பா பயணத்தில்...”
“நிறுத்து.. இதுக்கு மேல நான் எதும் கேட்க விரும்பல.. ச்சீ.. நான் உனக்கு என்ன குறை வச்சேன்..”, விசும்ப தொடங்கினாள் சமீரா.
கொஞ்ச நேர மவுனம் நிலவியது.
“உனக்கு உயிர் குடிக்கும் நோய் இருப்பது குறித்து கூட நான் கவலைப்படல.. ஆனா, எனக்கு இவ்வளோ பெரிய துரோகத்தை செஞ்சுட்டு எப்படி இத்தனை நாள் எதுவுமே நடக்காதது மாதிரி என்கிட்ட பழகின? ........ இப்ப கூட ரெமேரோ வரலைன்னா.. இதுவும் தெரியாம மறைச்சிருப்ப.. நீ ஒரு அற்பப் புழு. நான் போறேன்..”
சுமேதன் அவளை தடுக்க கூட முடியாதவனாக அயர்ந்து நின்றான். அவளுக்கும் ரெமேரோ தொற்றியிருக்குமோ என்ற கேள்வி அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்த்து.
------------------------------------------------------------------------------
“உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு காத்திருக்கின்றது”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.
சுமேதனுக்கு யாரிடமும் பேச எரிச்சலாக இருந்தது. பைத்தியக்காரனைப் போல சிஸ்டத்தை வெறித்து பார்த்தான். இரவெல்லாம் தூங்காத கண்கள் எரிந்தன. உடம்பெல்லாம் எரிந்த்து.. மெதுவான குரலில், “யார்” என்றான்.
“ஆஷா மருத்துவ ஆலோசகம்”
சட்டென நிமிர்ந்தான், “இணைப்பு கொடு”
“வணக்கும் திரு. சுமேதன்.”, திரையில் தோன்றியது நேற்று ரெமேரோ பரிசோதனை குறித்து சொன்ன அதே முகம்.
“வணக்கம்.. என்ன?”
“முதலில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லணும்.. நீங்க ரெமேரோ பாசிட்டிவ் அல்ல.. “
“என்ன.........?”
“ஆமா.. உங்களுக்கு ரெமேரோ தாக்கமே கிடையாது.. உங்களுடைய சரியான சோதனை அறிக்கை, உங்க மின்னஞ்சலுக்கு இன்னும் சில நொடிகளில் அனுப்பப்படும்..”
“என்ன... அப்படீன்னா.. முதலில் வந்தது”
“அது எங்கள் தவறு. இந்த தவறுக்கு எங்கள் ஆலோசகம் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இப்போ கொஞ்ச நாளா, எங்களுடைய இயல்பான அளவைத்தாண்டி ஆயிரக்கணக்கில் ரெமேரோ சோதனைகள் நடக்குது. ஆனாலும்.. நாங்க இன்னும் ஆறு சிக்மா தரத்தை பராமரிக்கிறோம்.. உங்களது மில்லியனில் ஒரு தவறாக அமைந்து போனது குறித்து நாங்கள் மிக வருத்தம்..... ”, பேசிக்கொண்டே போனது அந்த உருவம்..
சுமேதன் அவசர அவசரமாக அவனது பழைய சோதனை அறிக்கையை திரையில் தோற்றுவித்தான். பெயர் இருக்கும் இடத்தை பார்த்தான். அதில் தெரிந்தது, “Patient’s Name: Sumirdhan”.
------------------------------------------------------------------------------
ராபினி மெதுவாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். நீண்ட நாட்களுக்குப் பின் மனதின் மூலையில் குதூகலம் எட்டிப் பார்த்தது. அந்த அறுபது டிகிரி வெயிலும் இதமாக இருப்பதாகப் பட்டது. காதல் தோல்வியின் வலி இன்றுதான் தீர்ந்தது போல இருந்த்து.
"உன் நிராகரிப்பால் எத்தனை வருத்தம் அடைந்தேன் நான். எவ்வளவு காலம் குமைந்தேன். சில மணி நேரமேனும் உனக்கு மரண பயத்தை கொடுத்ததில் என் வலி பறந்து போனதடா. இதனால் என் வேலை பறிபோனாலும் இனி வருத்தமில்லை", சிரித்தாள் ராபினி.
------------------------------------------------------------------------------
சிறில் அலெக்ஸ் நடத்தும் தேன் அறிவியல் சிறுகதை போட்டிக்கான என் முயற்சி
பி. கு: இது ஒரு மறு ஒளிபரப்பு.. ரொம்ப பிசியாக்கும் :)


10 comments:
நல்ல Flow. வித்தியாசமான முடிவு! வாய்ப்பிருக்கிறது - பரிசு கிடைக்க!! ஆனால் .. சரி விடுங்கள்.
வாங்க யோசிப்பவர், நன்றி
ஆனால்...? என்னன்னும் சொல்லிடுங்க.. இல்லன்னா தலை வெடிச்சிடும்..:(
புபட்டியன் சார்... நல்லா இருக்குது கதை.
ஆனா ஏதோ மிஸ்ஸாகாற மாதிரியே இருக்கு. ஒரு வேளை ரொம்ப வருங்காலத்துல இல்லாம, கொஞ்சம் கிட்டக்க இருக்கற மாதிரி இருக்கறதுனாலயோ, என்னமோ...? ;-)
வாங்க வசந்த குமார், நன்றி
யோசிப்பவர் "ஆனால்" போட்டுட்டு போயிட்டார். நீங்களாவது ஆனா.. என்னன்னு சொன்னீங்களே.. அறிபுனை என்றாலே பொதுவா நமக்கு தோணுறதிலிருந்து கொஞ்சம் வெளியில எழுத நினைச்சேன்.
கதை மிகமிக அருமைங்க
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்
//பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்//
மிக மிக நன்றி அதிஷா
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
வாவ்.. :)
பரிசு கிடைத்ததா? :)
Welcome பொடியன்-|-SanJai & Thanks
//பரிசு கிடைத்ததா? :)//
No..
Sorry for English response..
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
Post a Comment