சமீபத்தில ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால, நான் (கொஞ்ச காலம்) படிச்ச தொடக்கப் பள்ளியோட பொன் விழா வந்தது. தடபுடலா நடத்தனும்னு என்ணத்தில நெறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சாங்க. ஏதாவது ஒரு நாடகம் போடனுமே.. அப்போ அந்த பள்ளியில படிச்சு உள்ளூரிலேயே வெட்டியா இருந்த கொஞ்சம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த பொறுப்பு.
அந்த கொஞ்சம் இளைஞர்கள் வேற யாருமில்லை.. நாங்கதான். என்ன நாடகம் போடலாம்னு யோசிச்சு யோசிச்சே பாதி நேரத்தை வீணடிச்சிட்டோம். இன்னும் ஒரு ரெண்டு கிழமை மட்டுமே இருக்கற தருவாயில, எப்படியோ ஒரு எஸ்.வி.சேகர் நாடகத்தை உல்ட்டா பண்ணி நடிக்கறதுன்னு முடிவாகியாச்சு. உல்ட்டான்னா அந்த நாடகத்தில இருந்து நமக்கு புடிச்ச ஒரு நாலஞ்சு சீன் மட்டும்.. அவ்ளோதான்.
அந்த நாலஞ்சு சீன்லயும், ஏகப்பட்ட கேரக்டர். அதிலயும் ஒண்ணு டிராமாக்குள்ள டிராமா போடற மாதிரி காட்சி. அதுக்காக ராஜா வேஷம் எல்லாம் கட்டி அரசவை செட் எல்லாம் போடணும். முதல்ல ஒவ்வொருத்தருக்கா கேரக்டர் கொடுத்தோம். ஹீரோ கேரக்டரில் நடிக்க நான், நீன்னு போட்டி இருக்கும்னு பாத்தா.. யாருமே ஹீரோவா நடிக்க முன் வரலை.
ஹீரோன்னா நிறைய வசனம் மனப்பாடம் பண்ணனும், சும்மா வந்தமா, ஜாலியா நடிச்சமான்னு இருக்க முடியாதுன்னு எல்லாரும் எஸ்கேப். சரின்னு எப்படியோ பேசி புலவரை (பட்டப் பெயர்தான், ஒரிஜினல் பேரு செந்தில்) ஹீரோவாக்கிட்டோம். எல்லாருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுத்தும், நிறைய கேரக்டர் மிச்சமா இருந்திச்சு. இதுக்கு மேல நாம மட்டும் இருந்தா ஆள் பலம் போதாதுன்னு, தெரிஞ்ச இன்னும் கொஞ்சம் பழைய மாணவர்களையும் புடிச்சிக்கிட்டோம். அப்பவும் தேறலை.
கடைசியா ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு வேஷம்னு முடிவாயாச்சு. ஆனா, ஹீரோ, ஹீரோவோட அம்மா, அப்பா வேஷத்தில நடிக்கறவங்க ஒரு வேஷம்தான் போட முடியும். மத்தபடி பால்காரன், போஸ்ட்மேன், நண்பன் 1, நண்பன் 2, மந்திரி, காவலாளி, சேவகன், பக்கத்து வீட்டுக்காரர், ஜோசியக்காரர்னு ஒண்ணு ரெண்டு சீன்ல மட்டும் வரவங்க கூடுதலா வேஷங்கள் போடணும்னு முடிவாச்சு.
அப்படி கொடுத்து, கொடுத்து நிறைய பேரு நாலு, அஞ்சு கேரக்டர் பண்றா மாதிரி ஆய்டுச்சு. அதிகபட்சமா “ஜம்பு” ஏழு கேரக்டர் போட்டு சாதனை படைச்சான்.. அந்த ஏழு கேரக்டர்லயும் அவன் மொத்தமா எட்டு வார்த்தைதான் பேசினான். அதிலும் ஜோசியக்காரரா வேஷ்டி கட்டி வரும் அதே சீனில கொஞ்ச நேரத்தில போலீஸ்காரரா காக்கி உடையில வந்தது மறக்க முடியாது. தசாவதாரத்துக்கு ஒரு மூணு கம்மி. ஆனாலும் சாதனைதானே.
ஆனா, இப்போ அவன் சாதனை முறியடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கவலையா இருக்கு. இந்த முறை ஊருக்கு போகும்போது அவனை கட்டாயம் பாத்து ஆறுதல் சொல்லணும்.
Wednesday, June 18, 2008
தசாவதாரம் - பல ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவிலேயே..
Monday, June 9, 2008
மனோரஞ்சன் கா பாப், பிஜிலி கோ பச்சாவோ, வோடாபோன் சோட்டா கிரெடிட்
தேர்வு (பரிட்சை) நடக்கும் நேரம். கடைசி சில நொடிகளே மிஞ்சியிருக்கும் நேரத்தில், ஒரு மாணவியின் பேனா மை தீர்ந்து விடுகிறது. மீண்டும், மீண்டும் எழுத முயற்சிக்கிறாள். ம்ஹூம்.. பேனா ஒத்துழைக்க மறுக்கிறது. தூரத்திலோ, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் தேர்வுத் தாள்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் டென்ஷன், கவலை. அவளின் பின்னால் சர்வ அலட்சியமாக அமர்ந்து ஏதோ எழுதும் ஒரு சிறுவன் இதை கவனிக்கிறான். அவன் இருக்கையிலிருந்து எட்டி பேனாவை நீட்டி, அவளது மேசை மீது ஒரு துளி மையை வைக்கிறான். அவள் பேனா அந்த மையை உறிஞ்ச, அப்புறம் என்ன... அவள் அழகுற புன்னகைக்க அவனோ, “இதெல்லாம் சகஜமப்பா” என்ற சைகையுடன் வெகுளிச் சிரிப்பு சிரிக்க.. வோடாபோன் சோட்டா கிரெடிட்.
“இந்த காலத்தில் யாருங்க மை பேனா பயன்படுத்தறாங்க, எல்லாம் பால்பாயிண்ட்தானே?”,
“என்னப்பா, தேர்வுக்கு போற பொண்ணு ஒரு எக்ஸ்ட்ரா பேனா கூடவா கொண்டு போகாது?”
இது போன்ற கேள்விகளையும் மீறி ஜம்மென்று மனதில் அமர்வதற்கு காரணம், விளம்பரத்தின் இயல்பான போக்குதான். வெகு இயல்பான உணர்வுகள், அந்த பெண்ணுக்கும், பையனுக்கும் இடையில் நடக்கும் இந்த சுவையான சம்பவத்தை விளம்பரத்தில் வரும் வேறு யாரும் பார்க்காமல் இருப்பது, இயல்பை மேம்படுத்திகிறது. அதுவும் குளோஸப்பில் காட்டப்படும் அந்த பேனா முனை (நிப்) அழகுக்கு அழகு சேர்க்கிறது.
நீங்களும் பாருங்க
என்னை கவர்ந்த மற்றுமொன்று. Havells மின் விசிறி விளம்பரத்தில் வரும், கவர்ச்சி ஆட்டக்காரி பிஜிலி களைத்து கீழே விழுகிறார். சுற்றியுள்ள அனைத்து “நல்ல மனது” படைத்த ஆண்மகன்கள், “பிஜிலி கோ பச்சாவோ” என்று கத்த “பங்கா” (மின் விசிறி) சுழல விடப் படுகிறது. ரெட்டை அர்த்தத்தை அழகாக பயன்படுத்திய விளம்பரம். இதை தமிழ்படுத்த முடியாது என்று எனக்கு தோண்றுகிறது. தமிழ்படுத்தினால், அந்த பெண்ணுக்கு, “மின்சாரம்” என்று பெயர் வைக்க முடியுமா..
இதே போல்தான் “மனோரஞ்சன் கா பாப்”. மிக நீளமாக, அந்த கால “அமர் அக்பர் அந்தோணி” டைப் இந்தி திரைப்படம் போல ஆக்கப்பட்டிருக்கும், இது “பொழுதுபோக்குக்கெல்லாம் அப்பன்” ஆன IPL விளம்பரம். ஆனால் இதை தமிழ்படுத்தியபோது, அந்த பஞ்ச் கிடைக்கவில்லை.
பெரும்பாலும் நகைக்கடை விளம்பரங்கள் எரிச்சல் மூட்டுவதாகத்தான் இருக்கும், ஆனால், “ஈடில்லா, இணையில்லா.. நாதெல்லா” விளம்பரம் அந்த ரைமிங்குக்காக பிடிக்கிறது. அதேபோல், “நிச்சயமாய், நிச்சயமாய்... கஸானா” என ச்சப்பக்கென்று ஒட்டிக் கொள்ளும் பாடல் கஸானா விளம்பரத்தின் பலம்.
விளம்பரங்களுக்கு மத்தியில் சிறிது நிகழ்ச்சியும் காட்டப்படும் இந்த தொல்லைக்காட்சி யுகத்தில், விளம்பரங்கள் முதல் பார்வையிலேயே மனதை கவருவதாக இருத்தல் நலம். இல்லையேல், ரிமோட்டே கதி.

