Tuesday, January 13, 2009

நாலு புத்தகங்கள், இன்னும் படிக்கலை

புத்தக கண்காட்சிக்கு போக ஒரு மணி நேரம்தான் கிடைத்தது. உள்ளே நுழையும்போது ஏதோ ஒன்று உறுத்தியது. மணிபர்ஸை திறந்து பார்த்தேன். ஒரு நூறு ருபா நோட்டும், ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளும் மட்டுமே கண்பட்டன. “ம்.. இத வச்சுகிட்டு கண்காட்சியா? ரொம்பதான் தெனாவட்டு”

முதலில் கண்ணில் பட்டது தோழமை பதிப்பகம். முழுக்க மழித்து, கண்ணில் மையும், உதட்டுச் சாயமும், நெற்றிப் பொட்டுமாக இருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். விலை ரூ 120 என்றது. “ம்.. அப்படியே போட்டுட்டு.. திரும்பி போகும்போது பாக்கலாம்”

அடுத்து உலாவியதில் தென்பட்டது “காலச்சுவடு”. சுந்தர ராமசாமியும், வைக்கம் முகமது பஷீரும்.. தமிழ் வலை படிக்க ஆரம்பித்ததிலிருந்து தெரிந்து கொண்ட பெயர்களாக குவிந்து கிடந்தன. அதில் இருந்தவற்றிலேயே, இதுவரை படித்த ஒரே ஒரு கோபல்லபுரத்து மக்களும் இருந்தது. “ஆசைதான், எல்லாத்தையும் வாங்க..”

அப்புறம் கண்ணில் பட்டது உயிர்மை. வாசலில் நல்லா பார்த்த பழகிய உருவம் ஒன்று நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. “யார் இது.. ஓ அவரா! அவர் எழுதின புத்தகம் ஒண்ணு கூட படிச்சதில்ல.. என்னத்த பேச”

புத்தகம் எதுவும் வாங்காமல் கோன் ஐசும், பஜ்ஜியும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க பொறாமையாக இருந்தது.

அடுத்தது கண்ணில் பட்டது ஜீயே. “லக்கிலுக் ஏதோ சொல்லியிருந்தாரே.. ஆ.. சீரோ டிகிரி முப்பது ரூபாய்க்கு”. பத்து வீதம் தள்ளுபடியில் இருபத்தேழு ரூபாய்தான் ஆனது. “போதும்..போதும்”

அப்புறம் மறுபடியும் காலச்சுவடு, கொஞ்சம் அப்படியே மேய்ந்து விட்டு போகலாம் என்றுதான் போனேன்.

“சார், கேஷ் மட்டும்தானா”
“இல்லியே கார்டும் உண்டே”
“ஹே..”

சுந்தர ராமசாமியின் எந்த புத்தகம் வாங்கலாம் என்று தடுமாற்றம்.

“மினிமம் டூ ஹன்ரண்ட் இருக்கணுமே”

ஐம்பது ரூபாய்க்குள் இன்னொரு புத்தகம் வாங்கணுமே. கவிதைக்கும் நமக்கும் காத தூரம். “சரி சின்னதா ஏதாவது கதை புத்தகமே வாங்கலாம்”.

திரும்பியும் வாசல் வரும்போது மீண்டும் தோழமை அழைத்தது. பத்து வீதம் தள்ளுபடி இங்கும். “அப்பாடா பதினஞ்சு ரூபாயாவது மிஞ்சிச்சே”

இப்போது நாலு புத்தகங்கள் வீட்டில் தூங்குது. இன்னும் படிக்கலை. இன்னும் ஒரு மாதத்திற்குள் கிழிந்து நார் நாராகி விடும் நிலையில் இருப்பதால் சீரோ டிகிரிதான் முதலில் படிக்கணும்.

அப்புறம் சிறிதாக இருப்பதால் “மதில்கள்” (வைக்கம் முகமது பஷீரை சுகுமாறன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்)

பின்னர் “புளிய மரத்தின் கதை” படிக்கலாம்.

கடைசியாகத்தான் “அவன் - அது = அவள்” படிக்கணும்.

ஆனா ஒண்ணு, காசு கொடுத்து வாங்கின உரிமையோடு எல்லாத்துக்கும் விமர்சனம் இதே வலையில் எழுதுவேன்.

கடைசியில் சாரு சொன்னது ஞாபகம் வருகிறது. ஒரு உணவகத்தில் போய் கோழியும், மீனுமாக கணக்கே பார்க்காமல் செலவழிக்க முடிகிறது. ஆனால் அதை விட மிக குறைந்த அளவு நல்ல புத்தகங்களுக்கு செலவு பண்ணும்போது கொஞ்சமா உறுத்துது. "இன்னும் வளரணும்"

8 comments:

Anonymous said...

Test for Thamizmanam...

VIKNESHWARAN said...

படிச்சிட்டு சட்டுனு ஒரு பதிவ போடுங்க... எங்க ரொம்ப நாளா ஆள காணும்... என்னாச்சி... உங்களை வலைவீசி தேடிகிட்டு இருந்தேன்....

VIKNESHWARAN said...

எனக்கு பதில் போடவில்லை. :(


அளவில்லா கோபத்தோடு,
விக்கி.

PPattian : புபட்டியன் said...

மன்னிக்கவும் "அளவில்லா கோபத்தோடு விக்கி"

அலுவலக ஆணி அதிகரிப்பும், கொஞ்சம் ஆர்வக் குறைவும் சேந்து வலையுலக பக்கமே வராம பண்ணிடுச்சு..

sowmya said...

//புத்தகம் எதுவும் வாங்காமல் கோன் ஐசும், பஜ்ஜியும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க பொறாமையாக இருந்தது.//

Yen...!

Vilakkam aliyungalen :)

PPattian : புபட்டியன் said...

வாங்க செளம்யா, வருகைக்கு நன்றி

என்னிடம் இருந்த கொஞ்சம் பைசாவும் புத்தகம் வாங்கவே சரியாயிருக்கும்.. அதில் எங்கே கோன் ஐஸ், பஜ்ஜி பட்ஜெட்? அதான் லைட்டா பொறாமை.. :)

Karthik said...

Illusions படிச்சாச்சா?
எப்படி இருக்கு??
:))

PPattian : புபட்டியன் said...

வாங்க கார்த்திக்

//Illusions படிச்சாச்சா?
எப்படி இருக்கு??//

Illusions படிச்சாச்சு.. நெறைய இடங்களில ரசிக்கவும், சிந்திக்கவும் வச்சாலும், மொத்தத்தில Richard Bach என்ன சொல்ல வர்றாருன்னு ஒரே குழப்பம். இன்னும் ரெண்டு வாட்டி படிச்சாதான் ஏதாவது புடிபடும் போல.

ஆனாலும், "I am free to do whatever as long as it does not hurt others" அப்படீங்கறதை பொய்யாக்க அவர் கொடுக்கும் Vampire Example சூப்பர்..