Wednesday, June 17, 2009

வள்ளியம்மையின் பழுப்பு கண்கள்

“மக்கள் வெள்ளத்தில் நீந்தி” என்கிற அரதப்பழசான வசனம் ஞாபகத்துக்கு வந்தது. வைகையை விட்டு இறங்கியவர்கள், பல்லவன் மீது ஏறப்போவோரை நெறித்துத் தள்ளி, வீட்டுக்கு போகும் அவசரம் காட்டினார்கள். கூட்டத்தில் முண்டிக் கொண்டே பிளாட்பாரத்தில் ஏதாவது புத்தகக் கடை தென்படுதான்னு பார்த்துக்கொண்டே வந்தேன். பழரசம், பிஸ்கட், மினரல் தண்ணீர் எல்லாம் கடந்து D12 வந்தது.

கடைசியாக தென்பட்ட கடையில் ஒரு “மாஸா” வாங்கியவாறு கேட்டேன், “புக் ஸ்டால் எதுவும் பக்கத்தில இல்லீங்களா?”

“நாலுலதாங்க கிடைக்கும்”

மணி 3.20.. இனிமேல் ஏறி இறங்கி புத்தகம் வாங்கி வரும்போது பல்லவன் மாம்பலம் தாண்டி விடுவான். பையை மேலே போட்டுவிட்டு, சன்னலோர என் இருக்கையில் உட்கார்ந்தேன். யாரும் அதுவரை அந்த கேபினுக்குள் வரவில்லை. தாம்பரத்தில் ஏறுவார்களோ...

வண்டி கிளம்ப சில “இன்னும் சிறிது” நேரமே இருக்கும்போதுதான் அவசர அவசரமாய் ஏறினார்கள் அம்மாவும், பென்ணும். நாற்பதை நெருங்கும் நடுத்தர வயது அம்மா, மறுபக்கம் திரும்பியவாறே இருந்தாள். முகத்தை காட்ட வெட்கம் போலும். சுற்றிலும் பார்த்து விட்டு, என்னை பார்த்து சிரித்தாள் குட்டிப்பெண்.. நானும் சிரித்தேன்.

“எந்த கிளாஸ்மா படிக்கிற?”

“செவந்த் முடிச்சு எய்ட்த் போறேன் அங்கிள்”

என் இந்த கேள்வி காதில் விழுந்ததால் என் பக்கம் முகத்தை திருப்பினாள் அம்மா... அவளை பார்த்த ஒரு கணம், என்னுள் ஏதோ செய்தது.. மென்மையான இந்த அதீத அழகு எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது.. எங்கே.. எங்கே இவளை பார்த்திருக்கிறேன்.. அவள் கண்களை மீண்டும் பார்க்க வேண்டும் என என்னுள் ஏதோ தூண்டியது.. அப்படி ஒரு அந்நிய பெண்ணை பார்ப்பது முறையல்ல என்று மனம் கூறியது.

ஒவ்வொரு முறை அவள் கண்களை என் கண்கள் எதேச்சையாகவோ வேண்டுமென்றோ சந்தித்தபோதும், எனக்குள் அதிர்வுகள் தொடர்ந்தன.. இது முறையல்ல என புத்தி கண்டித்த வண்ணம் இருந்தது.. கண்களை மூடி உறக்கம் வரவழைக்க முயற்சி தோல்வி கண்டது.. மூடிய கண்ணுக்குள்ளும் அவள் கண்களே தெரிந்தன..

எழுந்து சென்று பெட்டி கதவருகே நின்றேன். மடமடவென குளிர்நீரை குடித்தேன். தாம்பரத்தில் வண்டி நின்ற சில நொடிகளில் இறங்கி பயணியர் அட்டவணையைப் பார்த்தேன்.. 35..36..37......38..அபிநயா..13........39..வள்ளி.. என் கண்கள் நிலைகுத்தின..”வள்ளி” இவ்வளவு பரிச்சயமான பெயரா..

“திருச்சிராப்பள்ளி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ்.... இன்னும் சிறிது நேரத்தில்..”, தாவி ஏறினேன்.
--------------------------------------------------

“உன்னை.. கழுவில் ஏற்றியோ, சிரச்சேதம் செய்தோ, கொல்லச் சொல்லி மன்னர் மன்னன் உத்தரவு”

“அய்யா.. என்ன இது. இதற்கு வேறு வழியே இல்லையா”

“ம்..கூம். எதுவும் இல்லை.. இன்று இரவே உன் தலை கொய்யப்படும்”, என்று கூறிச் சென்றான் அந்த முரட்டு ஆசாமி.

மௌனியாய் அமர்ந்திருக்கும்போது அந்த ரகசிய குரல் கேட்டது..”விஜயாங்கா..”. அதே முரடன்.

“என்ன”

“சத்தம் போடாதே.. நீ உயிர் தப்ப ஒரே வழி உள்ளது”

“ம்.. என்ன வழி”

“கையூட்டு”

“கையூட்டா!”

“நூறு பொற்காசுகள்.. எனக்கு. என்னுடன் உள்ள மற்றொரு காவலனுக்கு நூறு.. பிறகு..”

“வேண்டாம்.. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை”

“பெரிய இடத்து தொடர்பு மட்டும்தான் உண்டோ?”, கிண்டலில் ஆத்திரம் கலந்து தொனித்தது, “அப்படியானால் தலை தப்பாது.. வாழ்த்துகள்”

மன அழுத்தம் தாளாமல் உறங்கிப் போனேன்.
--------------------------------------------------

சட்டென வந்த இரைச்சலில் தூக்கம் கலைந்தது..

“டீ.. டீ சூடா டீ..’ என் கடந்து போனான் ஒருவன். பைகளை தூக்கிக் கொண்டு, தங்கள் பெட்டியை தேடி அவசர நடை நடந்தனர் சிலர்.

“எந்த ஸ்டேஷன்”, என்றேன் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.

“செங்கல்பட்டு”, பட்டெனெ பதில் வந்தது அபிநயாவிடமிருந்து.

“நீ தூங்கலையா”

“இல்ல எனக்கு ட்ரெய்ன்ல தூக்கம் வராது அங்கிள்” , சொல்லும்போதே அது பொய்யோ என்று பட்டது.

சிரித்தபடி திரும்பியபோது.. மறுபடியும் அதே கண்கள்..பழுப்பு நிற கண்கள். அதே அதிர்வுகள். வள்ளி மீதிருந்து அகல மறுத்தன என் கண்கள். அவளுக்கும் அது தர்மசங்கடமாக இருந்திருக்கும் போலும், வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இனி இது சரிப்படாது என்று, எழுந்தேன். பேசாமல் வேறு இடத்தை பிடித்து உட்காரலாம் என்றால், பெட்டி முழுதும் மக்கள்.. சிலர் நின்று கொண்டும்.

“அடுத்து என்ன ஸ்டேஷன் வரும் அங்கிள்” என்றாள் குட்டிப் பெண்.

“அடுத்து மருவத்தூர்.. இல்ல.. அங்க ட்ரெய்ன் நிக்காது.. விழுப்புரம்.. அதுக்குள்ளயேவா.. வந்து லால்குடி.. இல்ல இல்ல...”

கலகலவென்று சிரிப்பொலி என்னை இடைமறித்தது. பழுப்பு நிறக் கண்களில் கேலி தொனிக்க என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முதல் முறையாய் என் முகம் பார்த்து பேசினாள்.
--------------------------------------------------

“என்ன தடுமாற்றம் விஜயாங்கா, நீ போகும் திசை உனக்கே தெரியவில்லையா, இதில் நாங்கள் வேறு உனக்கு சுமை”

“இல்லை வள்ளி.. இருள் சூழ்ந்து விட்டதால் குழப்பம்.. இன்னும் இரண்டு கிராமங்கள்தான். அதன்பின் எல்லை வந்து விடும்”

“எல்லையில் பிடிபடக் கூடாதே.. இறைவா.. முருகா..”

“அதற்கு ஒரு உபாயம் உண்டு.. ஆனால்”

“ஆனால் என்ன.. விடுதலைக்காக எதையும் செய்யலாம் விஜயாங்கா”

“அது.. சொல்லவே நா எழமாட்டேன் என்கிறது.. நீங்களும், அபியும் பிச்சைக்காரி தோற்றம் தரித்து சாவடியை கடந்து விடுங்கள்”

“நீ”

“சாவடி கடந்ததும் தென்படும் முதல் கோவிலில் தங்கி இருங்கள். நான் பின்னாலேயே பைத்தியக்காரன் தோற்றத்தில் வந்து விடுவேன்.”

நெடிய மௌனம் கவலையைத் தந்தது.. எங்கள் உரையாடலை சிறிது கவனியாமல் அபிராமி ஏதோ தனக்குத் தானே விளையாடிக் கொண்டிருந்தாள்.

“ஏன். கவலையா.. அரசியாக வலம் வந்தவரை, பிச்சைக்காரி ஆக்கிவிட்டேனே என்று கவலையா”

பளிச்சென்று வந்த பதில், “ஆம், சிறிது நெருடல்தான்.. ஆனாலும் பத்தோடு பதினொன்றாக அரசி வேடம் தரிப்பதை விட விடுதலையுடன் பிச்சைக்காரியாக இருத்தல் ஆனந்தமே”
--------------------------------------------------

வண்டி விழுப்புரத்தில் நின்றிருந்தது. இப்போதாவது ஒரு புத்தகம் வாங்கி விட வேண்டும். புத்தகத்துக்குள் தலை கவிழ்த்தால் பழுப்பு கண்களின் பார்வையிலிருந்து தப்பி விடலாம்..”

மாலை வேளை பசியை தணித்துவிட நடைமேடை முழுதும் ஆண்கள் ஏதாவது தின்று கொண்டிருந்தார்கள். அவசர உணவு தாங்கிய வண்டிகள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தன. இரைச்சல் சிறிதே நிரம்பிய அழகிய மாலை நேரம்.

“வட, பஜ்ஜி ஸ்சூடா வட, பஜ்ஜி” என்று வந்தவரிடம் கேட்டேன். “புக் ஸ்டால்!”

“இப்பிடி போயி அடுத்த பிளாட்பாரத்துல வாங்கிடுங்க.. வண்டி நிக்கும்.. போயிட்டு வந்திரலாம்”

குறுக்கு வழியில் அடுத்த நடைமேடையில் ஒரு விகடன் வாங்கிக் கொண்டு வந்து சில நிமிடங்கள் பெட்டிக்கு வெளியிலேயே காத்திருந்தேன்.
--------------------------------------------------

“வெகு நேரம் காத்திருந்தாயா விஜயாங்கா?”

“சுவரேறி குதித்து காவலர் கண்ணில் படாமல் வருவதே பெரும்பாடு..இதில் மறைந்து காத்திருத்தல் வேறு”

“மன்னித்துக் கொள் விஜயாங்கா.”

“அரசி. என்ன இது.. நான் உங்களை..”

“அரசி என்று என்னை விளிக்காதே விஜயாங்கா.. எத்தனை முறை கூறியிருக்கிறேன்.. நாம் தனிமையில் சந்திக்கும்போதாவது..”

“வள்ளி.. உங்கள் அழகு முகத்தையும், அந்த பழுப்பு நிற கண்களையும் காண எத்தனை சுவர் வேண்டுமானாலும் ஏறிக் குதிக்கலாம்”

“கேட்டு கேட்டு அலுத்த அதே வார்த்தைகள்”, என்னும்போது கொஞ்சலான ஒரு சினம்.

“எனக்கு அலுக்கவில்லையே”

“சரி.. எப்போது எனக்கு விடுதலை?”

“விரைவிலேயே...”

“சரி இதற்கு மேல் தங்க முடியாது.. ஐயம் பூத்து விடும்”

“இரண்டு நாழிகை காத்திருத்தலுக்குப் பின், இரண்டு நாடி சந்திப்பு.. ம்”

வள்ளி சென்ற சில நாடிகளில் காவலர்கள் சூழ்ந்தனர்.
--------------------------------------------------

குழந்தையிடம் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த வள்ளி என்னைப் பார்த்ததும் திரும்பி என்னை நோக்கி அமர்ந்து கொண்டாள். நான் புத்தகத்தில் மூழ்குவது போல் நடித்தேன். அந்த கண்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அடக்கினேன்.

“நீங்க திருச்சிதானா?”

கேட்டது அவள்தானா.. ஆச்சரியமாக இருந்தது. கேட்காதது போல புத்தகத்துள் முகத்தை மறைக்கலாமா என்று எண்ணினேன். ஆனால்

“ஆமா.. நீங்க?”, கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விட முடியவில்லை.

“நாங்க புதுக்கோட்டை..”

“ஓ.. திருச்சியில இறங்கி மறுபடியும் பயணமா?.. ட்ரெயின் ஏற்கெனவே லேட்டே..”

“ஆமா.. ஆனாலும் போய்த்தானே ஆகணும்”

“ஜங்ஷனுக்கு யாராவது வருவாங்களா?”

சிறிது தயக்கத்துக்குப் பின் கூறினாள், “இல்ல.. யாரும் இல்ல.. நாங்களேதான்”

“புதுக்கோட்டையில எங்க தாத்தா இருக்காங்க.. அவங்க கஷ்டப்பட வேணாம்னு, அம்மா வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க”, அபியும் கலந்தாள் எங்கள் உரையாடலில்.

“ஓ.. உங்க அப்பா வரலையா?”, அபியை பார்த்து நான் கேட்டேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் முகங்களும் சட்டென்று வாடியது போல் தோன்றியது.
--------------------------------------------------

“உனக்கு விடுதலை.. போகலாம்” என்றான் முரடன்.

“மன்னர் மன்னன் மனம் மாறி விட்டாரா”

“இல்லை உன் காதலின் வலிமை கண்டு நாங்கள் மனம் மாறி விட்டோம்”

“என்ன உளறல் இது?”

“போ.. சரியாக நள்ளிரவில் இந்த இடத்தைவிட்டு போ. உனக்காக ஒரு குதிரையும் ஏற்பாடாகி இருக்கிறது. தெப்பக் குளத்து சத்திரத்தில் உனக்காக காத்திருப்பார் உன் ஆசை அரசி”

“ஓ எல்லாம் அவர் ஏற்பாடுதானோ.. எத்தனை பொற்காசுகள் பெற்றாய் இதற்காக?”

“அதெல்லான் உனக்கெதற்கு? சோழ நாட்டை விட்டு போய் உனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள். உன் உடல் என்று வேறு ஒரு திருடனின் உடலை காட்டி இந்த வழக்கு முடிக்கப்படும்.

இது சரிதானா என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன். பழுப்பு நிறக் கண்கள் என்னை ஆட்கொண்டன. இதை விட்டால் வேறு வழியில்லை.
--------------------------------------------------

“எப்பம்மா ஜங்ஷன் வரும்?”, அலுப்புடன் கேட்டாள் குட்டி அபிநயா.

“நார்மலா ஒம்பது மணிக்கெல்லாம் போய்டும்.. இன்னைக்கு பத்து மணி ஆய்டும் போலருக்குது”, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெரியவர் உதவினார்.

“இல்ல ஒரு ஒம்பதேமுக்காலுக்கு போய்டும்னு நெனக்கிறேன்” என்றேன் நான்.

“அடுத்தது ஜங்ஷனா?” அவள் அவசரம் அவளுக்கு.

“இல்லம்மா.. அடுத்து லால்குடி, அப்புறம் ஸ்ரீரங்கம்.. “

“அதுக்கப்புறமாவது ஜங்ஷன் வருமா?”

“இல்ல.. பொன்மலை குறுக்க நிக்கும்”

மறுபடியும் சிரிப்பொலி

பொன்னான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே, “பத்து மணிக்கு அப்புறம் குழந்தையையும் கூட்டிட்டு எப்படி நீங்க புதுக்கோட்டை வரை போவீங்க..”

குழப்பத்துடன் பார்த்தன பழுப்பு கண்கள்..

“இல்ல, உங்களுக்கும் பிரச்சினை இல்லன்னா, என் வீட்டிலேயே இருந்திட்டு காலையில ஊருக்கு போகலாமே”

“இல்ல.. இல்ல.. நோ தேங்க்ஸ்”, அவசர அவசரமாக மறுத்தாள்

பக்கத்தில் ஐபாட் அணிந்து பாட்டு கேட்பவன் போல் இருந்த மஞ்சள் டீ-ஷர்ட் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தான்.

தடதடத்தபடி கொள்ளிடத்தை கடந்தது வண்டி. கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்தாள் அபிநயா.
--------------------------------------------------

“அம்மா எனக்கு உறக்கம் வருகிறது”, கண்கள் சொருக மடியில் சாய்ந்தாள் அபிராமி.

“என்ன இது, இவ்வளவு நேரம் விழித்திருந்தவள் இப்போது உறங்குகிறாளே.. எப்படி நாம் சாவடியை கடப்பது?”

“இருளிலேயே எல்லை தாண்டி விடுவது உத்தமம் வள்ளி”

“உண்மைதான்.. இவளை தூக்கிக் கொண்டு அவ்வளவு தொலைவு என்னால் செல்ல முடியுமா?”.

“இன்னும் சில நாழிகைகள் இந்த காட்டுக்குள் தங்கி விட்டு சூரியோதத்திற்குள் எல்லை கடக்கலாம்”

“இங்கே இந்த வனத்திலா.. எப்படி விஜயாங்கா?”

“ம்..காடுதான் பாதுகாப்பு. கிராமத்துக்குள் இப்போது நுழைந்தால் ஐயம் வர வாய்ப்புகள் அதிகம்”

“அதுவும் சரிதான்.. அந்தப்புரத்தில் பத்தோடு பதினொன்றாக திரும்பிப்போக முடியாது என்னால்”

“நானும் கழுமரக் களத்திற்கு மீண்டும் போக விரும்பவில்லை”

கலகலவென்ற சிரிப்பில் கவலை மறந்து திளைத்தோம்.

“ஆமாம், பத்தோடு பதினொன்றா.. நூறோடு நூற்றியொன்றா?..”

சிரிப்பொலி இன்னும் வலுத்தது.
--------------------------------------------------

அவரவர் பைகளை மேலிருந்து கீழே இறக்கி இருக்கை மேல் வைத்தார்கள். பயணம் முழுக்க உட்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்து காலை நீட்டி தயாராகினர். இவ்வளவு நேரமும் நின்றிருந்த சிலர் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கடைசி சில நிமிடங்களாவது உட்கார்ந்தால் கால்வலி போய்விடும் போலும்.

வண்டி திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நின்றது. கூட்டம் நெறித்தது. அந்த இரவிலும் சூடாக இருந்தது காற்று.

அரைத் தூக்கத்தில் இருந்த அபியை இழுத்துக் கொண்டு வள்ளி சிரமப்படுவது தெரிந்தது. நான் மெதுவாக நகர்ந்து அவள் கூடவே சென்றேன்.

“நீங்க போங்க.. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்”

“நிஜமாவா?”, அவள் கண்களை ஊடுருவிக் கண்டிப்புடன் கேட்டேன்.

சில நொடிகள் என் கண்களுக்குள் பார்த்தவள், பின் முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. நான் அசையாமல் நின்று என் பிடிவாதத்தைக் காட்டினேன்.

தலை நிமிர்த்தியவள் கேட்டாள், “உங்க வீட்டில..”

“என் வீட்டில நான் மட்டும்தான் இருக்கேன்.. இப்போ வீடு பூட்டிதான் இருக்கும்”
--------------------------------------------------

நீண்ட பயணம் தந்த களைப்பில் அபி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நானும் வள்ளியும் சூரியோதயம் தாண்டியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இரவு அது.

வள்ளியின் பழுப்பு நிறக் கண்களில் முழு விடுதலை உணர்வு தெரிந்தது எனக்கு.

--------------------------------------------------

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

18 comments:

Josh said...

சரளமான நடை. சரித்திரத்தை நிகழ்காலத்துடன் அழகாக ஒன்ற செய்துள்ளீர்கள்.

தலைப்பினை பற்றி இன்னொரு தடவை யோசிக்கலாம் அல்லவா? இது என்னுடைய ஆலோசனை மட்டுமே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வாழ்த்துக்கள்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கதையெழுதும் விழிகள்

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

காலங்களைப் பின்னியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

PPattian : புபட்டியன் said...

Josh
SUREஷ் (பழனியிலிருந்து)
T.V.Radhakrishnan
இரா. வசந்த குமார்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் புபட்டியான்..

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

RV said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

நாடோடி இலக்கியன் said...

அடிக்கடி பல்லவனில் பயணித்த அனுபவம் இருப்பதால் ரொம்பவே ஒன்றிப்போய் படித்தேன்.

நல்ல நடை.

நாடோடி இலக்கியன் said...

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

PPattian : புபட்டியன் said...

நன்றிகள்

வெண்பூ
ரெஜோ
RV

வெட்டிப்பயல் said...

You deserve it...

கதை மிகவும் பிடித்திருக்கிறது :)

வாழ்த்துகள்!!!

யாத்ரா said...

கதை ரொம்ப நல்லா இருக்குங்க,

வாழ்த்துகள்.

சின்ன அம்மிணி said...

போட்டியில் வெற்றி பெற்றதற்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

PPattian : புபட்டியன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

//அடிக்கடி பல்லவனில் பயணித்த அனுபவம் இருப்பதால் ரொம்பவே ஒன்றிப்போய் படித்தேன்.//

எனக்கும் கூட பல்லவனில் நடந்த ஒரு சிறிய சம்பவமே இந்த கதை முயற்சிக்க தூண்டியது.


நன்றி வெட்டிப்பயல்

//You deserve it...//

இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.. நன்றிகள்.

நன்றி யாத்ரா

நன்றி சின்ன அம்மிணி

சேரல் said...

ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பரே! தலைப்பும் கூட எனக்குப் பிடித்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

" உழவன் " " Uzhavan " said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)

PPattian : புபட்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி சேரல்

//தலைப்பும் கூட எனக்குப் பிடித்திருக்கிறது//

அதிகம் யோசிக்காமல் சடுதியில் வைத்த தலைப்பு..

-----------------------

வாழ்த்துக்கு நன்றி " உழவன் " " Uzhavan "