Thursday, July 2, 2009
தப்பு பண்ணிட்டேம்பா.. (குழந்தைகளுக்கு மட்டுமில்ல பெர்யவங்களுக்குமான குட்டிக்கதை)
வழக்கம்போல மதிய உணவுக்கு வீடு வந்து சேர்ந்தேன். எப்போதும் தூரத்திலேயே கேட்கும் அமிதாவின் சத்தம் அன்று கேட்கவில்லை. அமிதா என் ஊகேஜி படிக்கும் நண்டு. பள்ளி விட்டு வந்ததும், மேல் வீட்டு வாலுகளுடன் விளையாட்டில் வீடு அமர்க்களப்படும். ஆனால், இன்று அமைதியாக இருந்தது.
மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன். அதிசயமாக தொல்லைக்காட்சி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக சோபாவில் அமைதியாக அமிதா அம்ர்ந்திருந்த விதம் கொஞ்சம் கவலை தந்தது
"என்னடா செல்லக்குட்டி டல்லா இருக்கு?"
"ப்ச்" என்றொரு ஒலி மட்டுமே வந்தது.
கிட்ட நெருங்கி, "ஏய் என்னாச்சு?"
"ஒண்ணும் இல்ல", அப்பாடி பேச்சாவது வந்ததே..
"என்னடா.. வர்ஷனா, முதுளா யாரும் விளையாட வரலயா?"
"வந்தாங்க.. நாந்தான் போச் சொல்லிட்டேன்"
"ஏண்டா?"
வெறுமனே என்னைத் திரும்பி பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஸ்கூல்ல மிஸ் திட்டிட்டாங்களோ?"
"இல்ல மிஸ்லாம் ஒண்ணும் பண்ணல"
"யாரு மேலடா கோபம்.. அம்மா எதுனாலும் சொன்னாங்களா?"
சட்டென்று சமையலறையிலிருந்து சத்தம் வந்தது, "அதானே, இன்னும் எங்கடா என்னை இழுக்கலன்னு பாத்தேன்.."
"சரி, நீயாவது சொல்லு.. பாப்பாக்கு என்னாச்சு"
"எனக்கு தெரியல.. நான் கிச்சன்ல பிஸி, ஜூஸ் குடுத்தேன் வேண்டாம்னு சொல்லிட்டா.. பாருங்க மேசையில அப்படியே இருக்கு"
சட்டென்று என் கவலை கூடியது. என்னடா இது ஒரு நர்சரி குழந்தைக்கு வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.. சரி தாஜா பண்ணுவதே ஒரே வழி என்று தொடங்கினேன்.
"என்னம்மா.. அப்பா மேலெ கோவமா? நான் ஏதானும் வாங்கித் தரணுமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா"
"அப்ப என்னதாண்டா கோவம்"
"என் மேலயே எனக்கு கோவம்"
"உன் மேலயேவா?", அதிர்ச்சியா இருந்தது. தன் மேலேயே கோபப்படும் வயசா இது?, "ஏன்? என்ன கோவம்"
"நீங்தானே சொன்னீங்க.. யார்க்காவது நம்ளால கஷ்டம்னா, அது தப்புண்ணு"
ஒன்றும் புரியவில்லை எனக்கு, "என்னம்ம சொல்ற? உன்னால யாருக்காவது கஷ்டமா? வர்ஷனாவுக்கா? முதுளாவுக்கா?.."
"இல்லப்பா.. நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், அதனாலதான் கஷ்டம் வந்திச்சு"
"என்ன தப்பு பண்ணின? யாருக்கு கஷ்டம்?"
"அது.. என்னால பென்னியோட பொம்மையெல்லாம் தொலைஞ்சி போயிடுச்சி"
"பென்னியா? ஸ்கூல்ல உன் ஃப்ரண்டா?.. பரவாயில்ல நாம அவனுக்கு வேற பொம்மை வாங்கி கொடுக்கலாம்.. சரி.. உன்னால எப்படி தொலைஞ்சிச்சு?"
"டோரா சொல்ல சொன்னத நான் சொல்லலியே.."
"டோராவா? என்ன சொல்ல சொன்னிச்சு..?", புரிந்த மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும்.
"குள்ளநரி திர்டக் கூடாதுன்னு, மூணு வாட்டி சொல்ல சொன்னிச்சு.. நாந்தான் சொல்லலியே"
"ஏன் சொல்லலை?"
"டோராவே சொல்லிடும்னு நெனச்சேன்"
"அப்புறம்"
"குள்ளநரி பொம்மையெல்லாம் வீசிடுச்சி.. என்மேலெயே கோவம்னால நான் டீவிய ஆஃபிட்டேன்"
------------------------------------------
Labels:
குழந்தைகள்,
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)


7 comments:
Test Comment
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
சூப்பர் சூப்பர் சூப்பர்... குழந்தைகள் உலகம் எவ்வளவு அழகானது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெட்டிப்பயல்
excellent and fantastic flow.
keep the good work.
ரொம்ப ரசிச்சேன் நண்பரே.
//வெறுமனே என்னைத் திரும்பி பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.//
இதெல்லாம் ஒரு கதையின் சூழலை அருமையா வாசகனிடம் கடத்தும்.
ரொம்ப பிடிச்சிருந்தது.
நன்றி நாடோடி இலக்கியன்
என் பல இடுகைகளிலும் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சி.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..
Post a Comment