Monday, August 3, 2009

சிலோனா நீ?

குட்டி கனேஷ் கடைக்கு போகும்போதே அவரை கவனித்தேன். உயரமாக, சிவப்பாக (வெள்ளையாக?) அடர்ந்த மீசை வைத்து அந்த கால சினிமா ஹீரோ போல இருந்தார். (இந்த காலத்தில் அப்படி ஆளுங்களெல்லாம் தனுஷ்கிட்டயோ, ரித்தீஷ்கிட்டயோ அடி வாங்கும் வில்லன் வேஷம்தான் கிடைக்கும்). சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் வரும் எல்லா கேரக்டர்களும் வைத்திருக்கும் "விக்" போல முன் தலைமுடி சுருண்டு நெற்றியில் விழுந்தது. ஆஜானுபாகு என்று சொல்லலாம் அவரை.

"கா லிட்டர் தேங்கா என்னை, ரெண்டு தேசிக்காய்", என்றவாறு பாட்டிலை நீட்டினேன். குட்டி கனெஷ் புரிந்து கொண்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.

"சிலோனா நீயு?", கேள்வி வந்த திசையில் திரும்பினேன். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. அவர்தான், அந்த ஆஜானுபாகுதான்.

"ஓ" என்றபடி திரும்பிக் கொண்டேன். ஒரு நொடிக்கு மேல் அவரை பார்க்க பயமாய் இருந்தது.

"என்னா ஓ.. ஆமான்னு சொல்லுடா", பேசும்போது வாயில் புகை வழிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அந்த "சொல்லுடா" வில் கணிவு தெரிந்ததால் கொஞ்சம் பயம் விலகியது. ஒரு சிரிப்புடன் நான் நிறுத்த முற்பட்டேன். ஆனால், அவர் விடவில்லை, "எந்த கிளாஸ் படிக்கிற?",

"ஆறாவது"

"ஹைஸ்கூலா.. ம்ம்.. எங்க அப்பாவ பாத்திருக்கியா?"

"யாரு?", எனக்கு அறிந்து கொள்ளும் சுவாரசியம் இல்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தார், "பீட்டி வாத்தியார்.. ஜேசுராம்.. ரொம்ப கண்டிப்பா இருப்பாரு", என்றார் ஒரு குறும்பு சிரிப்புடன்.

"சரிண்ணே நா வரேன்", எண்ணெய் பாட்டிலையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினேன்.

கொஞ்சம் தூரம் போனதும் தூரத்தில் இருந்து சத்தம் வந்தது, "ஏய், உம்பேரு என்னா?"

நின்றி திரும்பி சொன்னேன், "ஹரி", என் பேரை யாராவது கேட்டால்தான், அவர் பேரை கேட்கும் ஞாபகம் வரும் எனக்கு, "உங்கட பேர்?"

"தாமஸ்"
-----------------------------------------

நான் ஹைஸ்கூல் சேர்ந்து சில நாட்களே ஆகியிருந்தன. புத்தனாம்பட்டியில் இருப்பதே இரண்டு பள்ளிக்கூடங்கள்தான். ஒன்று எலிமென்டரி பள்ளி, ஒண்ணாவதிலிருந்து அஞ்சாவது வரை வகுப்புகள் உண்டு. இன்னொன்றில் ஆறாவதில் இருந்து +2 வரை உண்டு. சாதாரணமாக அதை மேல்நிலைப் பள்ளி (ஹையர் செக்கண்டரி) என்றுதான் சொல்லணும்,, ஆனாலும் அது ஹைஸ்கூல்தான் அந்த கிராமத்துக்கு.

அன்றுதான் எங்களுக்கு முதல் விளையாட்டு வகுப்பு. எல்லா மாணவர்களும் வகுப்பறையிலிருந்து வரிசையாக மைதானத்தின் மூலையில் இருந்த "இச்சி" மரத்தடிக்கு வருமாறு பணிக்கப்பட்டனர். போனோம், மண்ணில் உட்கார்ந்தோம்.

"பாய்ஸ்.. எல்லாம் நேரா நிமுந்து உக்காரணும்..இல்லண்ணா எனக்கு புடிக்காது", பின்னாலிருந்து கரகரப்பான, கண்டிப்பான ஒரு குரலுடன் என்ட்ரி ஆனார் பீட்டி வாத்தியார். வெள்ளை ஷர்ட்டும், கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார். வழக்கமாக அந்த ஸ்கூலில் பெரும்பாலான ஆசிரியர்கள் வேட்டி அணியும் வழக்கம் இருந்தது. குழாய் அணியும் ஒரு சிலரும் சட்டையை "டக் இன்" செய்வதில்லை. ஆனால், இந்த வாத்தியாரின் சட்டை அழகாக பேன்ட்டுக்குள் சொருகப்பட்டிருந்தது. சொருகப்பட்ட இடத்தில் தொந்தி வழிந்து தொங்கியது. பாதி நரைத்த முடி, மீசையும் அது போலவே. பார்க்க ஒரு போலீஸ் அடிகாரி போல இருந்தார்.

"அடுத்த பீட்டி பீரியட்ல எல்லாரும் விளையாடலாம். நல்ல புள்ளையா நடந்துகிட்டா பந்தெல்லாம் தருவேன்.. இப்ப ஒவ்வொருத்தனா பேரையும், எந்த ஊரிலருந்து வர்ரேணும் சொல்லு.."

ஆரம்பித்தது படலம்

"எம்பேரு கலையரசன் சார், நான் ஓமாந்தூர்லருந்து வரேன் சார்", அவன் சார் போட்டது ஜேசுராம் வாத்தியாருக்கு பிடித்திருக்கும் போலும். கொஞ்சமாக புன்னகைத்தார்.

"குகனேந்திரன்.. சாத்தனூர்"

"அன்பழகன்.. நேரு ஹாஸ்டல்"

"ப்ரகாஷ்.. உள்ளூர்தான் சார்"

என்று தொடர்ந்தது.

பின்னர் தொடங்கியது லெக்சர்.. "A sound mind in a sound body" இதுக்கு மீனிங் தெரியுமா?".. எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்கு கொஞ்சமா புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும் தெரியும்னு சொல்ல பயம்.

"உடம்பை நல்லா வச்சுக்கணும்னா, நல்லா விளையாடணும்.. உடம்பு நல்லா இருந்தாதான் மனசு நல்லா இருக்கும். மனசு நல்லா இருந்தாதான் நல்லா படிக்க முடியும்..", ஒரு நிமிடம் எல்லாரையும் பெருமிதமான பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார், "இப்ப புரிஞ்சுதா.. பீட்டி பீரியட் எவ்ளோ முக்கியம்ணு?"

எல்லாரும் மண்டையை ஆட்டினோம்

"சரி, நல்லா விளையாட என்னா செய்யணும்..ஏய் நீ எந்திரி", கடைசி வரிசையில் இருந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த சரவணனை பார்த்துக் கேட்டார்

எழுந்து பேசாமல் நின்றான். மனதில் ஜேசுராமை திட்டுவது போல் தெரிந்தது.

"ம்.. தெரியாதா.. சரி உக்காரு.. நல்லா திங்கணும்.. நல்லா தின்னாத்தான் நல்லா.." என்றவாறு எங்களை பார்த்து தலை மேல் நோக்கி அசைத்தார்.

"நல்லா வெளையாடலாம்", கோரஸாக சொன்னோம்.

"நீ எழுந்திரு..", ரெட்டை ஜடை போட்டிருந்த ராஜ்குமார் எழுந்து நின்றான், “ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?”

“குட்பால் சார்”, அவன் சொன்ன மறுநொடி நான் சிரித்து விட்டேன். சட்டென்று ஜேசுராம் என் பக்கம் திரும்பினார், “என்னடா சிரிப்பு?”

“வந்து ஃபுட்பால்..”

“ஓ.. ஒனக்கு எல்லாம் தெரியுமோ.. ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?” ஜேசுராமுக்கு நான் சிரித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதை அறிமுகப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதால் உற்சாகமாக சொன்னேன், “கிரிக்கெட் சார்”.

முகத்தை சுளித்தார் வாத்தியார்..”ஆமா, அதெல்லாம் ஒரு விளையாட்டு”, என்ற நக்கலுடன் தொடர்ந்தார், “நல்லா விளையாண்டா.. டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல்ன்னு போகலாம்.. என் பையன தெரியுமா? சும்மா ஆறடி இருப்பான், ஸ்டேட் லெவல் வாலிபால் போயிருக்கான்.. ஒரு ஸ்மாஷ் அடிச்சா, பந்த தொடறவன் கை காலியாய்டும்..”, நிறுத்தி எங்களையெல்லாம் ஒருமுறை பார்த்தார். யாருக்குமே ஸ்மாஷ் என்றால் என்னவென்று கூட தெரியாது. வாத்தியார் முகத்தில் பெருமிதம் தாண்டவமயாடியது. “யாராவது எம்பையன பாத்திருக்கீங்களாடா?” என்றார்.

அனிச்சையாய் என் கை மேலே போனது, “நான் பாத்துருக்கேன் சார்”

“எங்கடா?”, முகத்தில் பெருமிதம் இன்னும் கூடியது. தன் வகுப்பு மாணவர்களுக்கு தெரியும் அளவு தன் மகன் பிரபலாமக இருப்பான் என்று அவர் நினைத்திருக்கவில்லை போலும், “எங்க பாத்திருக்க?”

“குட்டி கனேஷ் கடையில் சார்.. அங்க அவரு சிகரெட் குடிச்..”, சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். தலையை குனிந்து கொண்டேன்.

யாரிடமிருந்தும் சத்தமே இல்லை. தூரத்தில் ஆசிரியர் இல்லாத வகுப்புகளிலிருந்து வரும் இரைச்சல் சத்தம் தெளிவாக கேட்டது. தலை நிமிர்ந்தபோது மற்ற மாணவர்கள் எல்லாரும் என்னையே பார்ப்பது தெரிந்தது. ஜேசுராமின் முகம் சுருங்கியிருந்தது. ஒருவிதமான இறுக்கமான் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டோமே எனத் தோன்றியது. நல்லவேளை அமைதியை கலைக்கும் விதமாக “டிங்.. டிங்.. டிங்” என மணி ஒலித்தது. ஒருவழியாக முதல் பீட்டி பீரியட் முடிந்தது. எல்லாரும் எழுந்து கலைய முற்படும்போது வாத்தியாரின் குரல் ஒலித்தது.

“ஏய், நீ மட்டும் நில்லு... மத்த எல்லாரும் கிளாசுக்கு போலாம்.”

-தொடரும் (ஆனால் அடுத்த பாகத்தில் முடியும்)

4 comments:

சின்ன அம்மிணி said...

நல்ல இடத்தில சஸ்பென்ஸ், நாளைக்கே அடுத்த பகுதியை போடுங்க

PPattian : புபட்டியன் said...

வாங்க சின்ன அம்மிணி, உங்க ஆர்வத்துக்கு நன்றி.

ரெண்டாவது பகுதியை நான் இன்னும் எழுதி முடிக்கலை.. அதோடு நான் கொஞ்சம் ஸ்லோ (எழுதுவதில்)..:) அதனால கண்டிப்பா புதன்கிழமை வெளியிடறேன்.

சின்ன அம்மிணி said...

பரவாயில்லை, புதன்கிழமை வரைக்கும் மண்டை வெடிக்காமல் பாத்துக்கறேன் :)

PPattian : புபட்டியன் said...

//மண்டை வெடிக்காமல் பாத்துக்கறேன் :)//

நான் எழுதறதை படிச்சிட்டு மண்டை வெடிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்.. :)