பார்த்திபன் கனவாகவும், சிவகாமியின் சபதமாகவும் மட்டுமே கொஞ்சமாகத் தெரிந்திருந்த மாமல்லபுரத்தை நேரில் கண்டது என் வாழ்வின் மறக்க முடியா நிகழ்வென்பதை மறுக்க முடியாது. பொதுவாக இது போன்ற சுற்றுலாக்களில் இணைந்தே இருக்கும் புழுதியும், வெயிலும், கூட்டமும், அசௌகரியங்களும் "எப்போடா வீடு வந்து சேருவோம்" என்று அயர்ச்சியைத் தந்து அந்த தளங்கள் தரும் அனுபவங்களை மழுங்கடித்து விடும். ஆனாலும் அவற்றையும் மீறி (இதுவரை நான் சென்றிருக்கும் வெகு சில வரலாற்று, கலைத்தலங்களில்) அந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லாமல் செய்து, பிரிந்தும் மனத்தில் இனிக்கும் தளங்கள் இரண்டேதான்.. ஒன்று தாஜ்மகால்.. இன்னொன்று?.. அதான் இது..
மாமல்லபுரத்து கடற்கரைக் கோவில். அது ஒரு அற்புதம். இத்தனைக்கும் நாங்கள் அந்த ஊரில் உள்ள அர்ஜூனன் தவம், ராமனுஜர் மண்டபம், மகிசாசுரமர்த்தினி குகை, ராயர் கோபுரம், கிருஷ்ணாவின் வெண்ணெய்ப் பந்து உட்பட்ட பலவற்றை பார்த்துக் களைத்த பின்னரே கடற்கரைக் கோயிலுக்குச் சென்றோம்.. ஆனாலும் பார்த்த மாத்திரத்தில் உள்ளம் கொள்ளை போனதே.. WOW..
வரலாற்றை விடுங்கள்.. மாமல்லனும் சிவகாமியும் (?!!) நடமாடியிருக்கலாம் என்னும் எண்ணத்தை மறங்கள்.. அந்த படைப்பின் தற்போதைய அழகே போதும்.. அங்கேயே கேம்ப் அடிக்க..
அதே தாஜ்மகாலுக்கும், ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும் (மலை மலை அல்ல) பொருந்தும். தாஜ் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது (ஆங்கிலத்தில்).
அப்புறம் சில மாமல்லபுரத்துக் குறிப்புகள் (நாங்கள்ளாம் நெனச்சா வண்டி எடுத்துட்டு மகாபலிபுரம் போய்டுவோமாக்கும்னு சொல்பவர்களுக்கு இல்லை இது!!!).
* மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டியவை நான்கு இடங்களில் உள்ளன
1. அர்ஜூனன் தவம், கலங்கரை விளக்கம் (புதிது, பழையது), பட்டர் பால், ராயர் கோபுரம் உட்பட்ட பல புதுமைகள், ஒரு பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் ஒரு நான்கு சதுர கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதிக்குள் வண்டிகள் நுழைய முடியாது.. மலைப் பிரதேசத்து கால்நடைதான். சில இடங்கள் தப்பிப் போகவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்திற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
2. பஞ்ச ரதங்கள் உள்ள ஒரு மணல் நிறைந்த சமதளம். இது முதலில் சொன்ன பிரதேசத்திலிருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு பத்து ரூபாய் கட்டணம் (பெரியவர்களுக்கு மட்டும்). இந்த நுழைவுச் சீட்டையே கடற்கரைக் கோவிலிலும் பயன்படுத்தலாம்.
3. கடற்கரைக்கோவில் மற்ற இரண்டு இடங்களில் இருந்தும் ஏறத்தாழ சமமான தூரத்தில் (இரண்டு கிலோ மீட்டர்?) உள்ளது. இது மிக்க அழகாக பராமரிக்கப்பட்ட புல் தரைகளுடன் கூடிய இடம்.
4. புலிக் குகை உள்ளது மாமல்லபுரத்து நகரத்துக்கு வெளியே.. இது நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. போகும்போதே இதை பார்த்து விட்டு போவது உசிதம். இல்லாவிட்டால் களைப்பு, தளர்வும் கூடி இதை விட்டு விட வாய்ப்புள்ளது ( அனுபவம் :( )
* நகரத்து சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால், உள்ளே செல்வதும், வெளியே வருவதும் நேரத்தைத் தின்று விடுகிறது. அதனால் ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு நடராஜா சர்வீஸே நல்லதோ எனத் தோன்றுகிறது.
* கடற்கரைக் கோவிலிலும், பஞ்சரதத்திலும் வண்டிகளுக்கு (பார்க்கிங்) ரூ 20 வசூலிக்கப்படுகிறது.
* அடையாறு ஆனந்த பவனில் கூட்டம் அள்ளுகிறது (நாங்கள் போனது சனிக்கிழமை). சாப்பாட்டுக்காக வரிசையில் நின்று வெறுக்கடிக்கிறது. இன்னும் கொஞ்சம் வாடிக்கையாளர் நலம் பேணலாம்.
விதவிதமாக புகைப்படங்கள் சுட்டுக் கொண்டு வீடு திரும்பும்போது நிறைவு.. அதுவே தேவை இது போன்ற சுற்றுலாக்களில். இதுதான் என் நிழற்படம்..
சென்னைக்குத் திரும்பும் வழியில் "தக்ஷின் சித்ரா" என்னும் இடத்தில் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தோம். அது குறித்து அடுத்த இடுகையில்.

