Wednesday, January 6, 2010

லிவிங் ஸ்மைல், ரகோத்தமன், டாப் டென்.. இன்னபிற

முதலில் கடந்த வாரம் படித்த புத்தகங்கள்

வாழும் புன்னகையின் "நான் வித்யா" இந்த வருடத்தின் முதல் புத்தகம். ஏற்கெனவே பாலபாரதியின் "அவன் - அது = அவள்" மூலமாக திருநங்கைகள் குறித்தும் அவர்களது மன / உடல் போராட்டங்கள் (நிர்வாணத்துக்கு முன்னதும், பின்னதும்) குறித்தும் ஓரளவுக்கு தெரிந்து கொண்டாலும், First Hand Information (முதற்கை தகவல் என்று சொல்லலாமோ?) மூலம் “நான் வித்யா” என்னை மேலும் பாதித்தது.

ஒரு அழகிய கதை போல பயணிக்கும் புத்தகம், ஆரம்ப கட்டங்களில் எனக்கு பரிச்சயமான திருச்சியின் பல இடஙளின் ஊடாக நகர்வதால் ஒட்டுதல் அதிகமாகிறது.வித்யா படித்த அதே பள்ளியில்தான் நானும் +2 படித்தேன் (உலக மகா அதிசயம்!!!).. என்ன, அவர் படிப்பதற்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னெயே படித்து விட்டேன். அவரைப் போலவே இயற்பியல் வாத்தியாரிடம் அறை வாங்கியிருக்கிறேன் (பாடம் நடத்தும்போது கடைசி பெஞ்சில் அரட்டை அடித்ததற்காக சந்ரு, கிருஷ்ணா மற்றும் நான் ஆளுக்கொரு அறை பெற்றோம்)

சரவணனாக அவரது மன உளைச்சல்கள், பெண்ணாகும் வெறி கொண்டு அலைந்தது எல்லாமும், பெண்மைத்தனம் கொண்டவர்கள் பாழாய்ப்போன சமூகத்தில் தினம் தினம் படும் அவலங்களை சுருக் என தைக்கும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் பெண்ணாய் மாறி பாலியல் தொழிலோ, பிச்சையோ புகாமல் உழைத்துப் பிழைக்க படும் அவலங்கள்.. அப்பப்பா.. என்ன மன உறுதி வேண்டும் அவற்றை தாங்கிக் கொள்ள.

கடைசியில் திருநங்கைகளுக்கான அமைப்புகள் வெறும் "எயிட்ஸ் வராமல் பாலியல் தொழில் செய்ய அழைக்கும் அமைப்புகள்" என்றும், திருநங்கைகளுக்கான உண்மையான தேவைகள் குறித்தும் பேசும்போது அவரது தெளிவு நமக்குள்ளும் ஊடுருவுகிறது.

ஆமாம்... புனேயில் அவர் சார்ந்திருந்த குடும்பத்தினரை மீண்டும் சந்தித்தாரா.. தன் நிலையை விளக்கினாரா என்றெல்லாம் "நான் வித்யா - 2" வில் சொல்வாரோ? :).

----------------------------------

அடுத்தது ரகோத்தமனின் "ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்". இணையத்தில் பலரும் இது குறித்து ஏற்கெனவே பேசி விட்டார்கள். நான் பதின்ம வயதில் பாக்கெட் நாவல் வகையறாக்களின் Ardent Fan. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு அற்புதமான புலன் விசாரணை நாவல் படித்த திருப்தி. புத்தகம் ராஜீவ் வழக்கில் மட்டும் தேங்கி விடாமல், அது சார்ந்த பலப் பல தகவல்களை சுமக்கிறது.. கொடுக்கிறது. எல்லாமே புருவம் உயர்த்தும் ரகம், ஆச்சயர்க் குறி!!

பாரிஸ் கார்னரில் ஷாப்பிங், நாதமுனியில் திரைப்படம், VGP யில் உல்லாசம் என தாணு கழிக்கும் நாட்களும், வெடிகுண்டை உடலில் சுமந்த வண்ணம் பிள்ளையார் தரிசனம், பஸ் பிரயாணம், கனகாம்பரம், முனியாண்டி விலாஸ் பிரியாணி என இருப்பதும் இனம்புரியாத ஒரு உணர்வை மனதுள் ஏற்படுத்துகின்றன.

ரகோத்தமன் சொல்வது எல்லாமே (Exposed) உண்மைதானா என்றெல்லாம் ஆராய முடியாது.. ஆனாலும் வாசிக்கலாம்.. ஆர்வத்துடன்.

----------------------------------

சன் டாப் டென்னில் 2009 இன் சிறந்த படங்கள் என்று 10 படங்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், மா...சில்லாமணி, படிக்காதவன், கண்டேன் காதலை, அயன், வேட்டைக்காரன் என எல்லா படங்களும் இடம் பிடித்திருந்தாலும்.. ஒரு பெரிய குறை. மெகா ஹிட் படமான அண்ணன் சுந்தர.C யின் "தீ" படம் இடம் பிடிக்காததை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆதவனை கழற்றி விட முடியாது (ரெட் ஜயன்ட்!!). ஆனாலும் நாடோடிகள், பேராண்மை போன்ற சும்மா படங்களை தூக்கி விட்டு தீயை சேர்த்திருக்கலாம்.

அப்புறம் நான் இதில் ஒரு படம் கூட பார்த்ததில்லை.. :(

----------------------------------

அண்மையில் பார்த்த ரெண்டு படங்கள்

Department 36: பிரெஞ்சு போலிஸ் பத்தின கதை. புலன் விசாரிக்கும் காவல் துறைக்குள் உள்ள அரசியலால், ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தை முறியடிக்கும் அதிகாரி எப்படி சிறைக்கு அனுப்பப்படுகிறார் என்று போகிறது கதை.

கன்னத்தில் முத்தமிட்டால்: 269 (ஏதோ ஒரு நம்பர்) ஆவது முறையாக KTV யில் பார்த்தேன். பசுபதியை பார்த்து மீண்டும் வியந்தேன். என்ன ஒரு Attitude, படத்திலேயே யாழ் தமிழை அவர்தான் மிகச்சரியாக பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த கடைசி காட்சி.. சிம்ரன், கீர்த்தனா, நந்திதா, மாதவன், பிரகாஷ்ராஜ், பசுபதி என முகங்கள் மாறி மாறி.. உணர்ச்சிக் குவியல். ரஹ்மான் காட்சிக்கு அழகு சேர்க்க, மழை அழகுக்கு அழகு.

----------------------------------

மக்கள்ஸ் எல்லாரும் 2009ஐ திரும்பிப் பார்த்து பதிந்து விட்டார்கள். நாமலும் ஏன் அப்படி செய்யக் கூடாதுன்னு தோணியதால், திரும்பிப் பார்க்கிறபோது

"டேய் Bபாடு.. முன்னால பாத்து வண்டிய ஓட்டுறா சாவு கிராக்கி" என்று வசவுதான் வருகிறது.

9 comments:

தர்ஷன் said...

மன்னியுங்கள் புட்டியன்
பசுபதி அழகாக தமிழ் பேசுகிறார் ஆனால் அது யாழ் தமிழ் அல்ல.
நான் இலங்கையில் மலையகத்தைச் சேர்ந்தவன். நான் பாடசாலை படிக்கும் காலத்தில் போர் சூழல் காரணமாக நிறைய மாணவர்கள் யாழில் இருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களின் தமிழை விளங்கிக்கொள்ள எனக்கு நிறைய சிரமம் இருந்தது. அவர்களிடம் அவர்களது மண்ணுக்கே உரிய சில சொற்கள் இருந்தன. ஆனால் இன்று அவர்கள் பேசுவது கூட முன்பு போல் இல்லை. தமிழக சினிமாக்கள் அவர்களின் தனித்துவமான மொழியையும் பறித்து விட்டது.(நான் இங்கே சந்தித்த சிலரை வைத்தே அப்படி கருதுகிறேன் வடக்கில் இன்னமும் அது உயிர்ப்புடன் இருக்கலாம்)

thenammailakshmanan said...

அருமையான பகிர்வு பட்டியன்

நல்ல சரளமா இருக்கு வாழும் புன்னகை ..ரகோத்தமன் ..
சினிமான்னு கலந்து கட்டிய கதம்பம்போல இருக்கு..

தாணுபற்றிதான் வருத்தமாக இருக்கு

சின்ன அம்மிணி said...

ரகோத்தமனின் புத்தகம் பற்றி எல்லாரும் நல்லபடியாக விமர்சித்திருக்கிறார்கள். படிக்கும் வாய்ப்பு கிட்டுமென நம்புகிறேன்.

PPattian : புபட்டியன் said...

கருத்துக்கு நன்றி தர்ஷன்

மன்னிக்கவெல்லாம் சொல்லாதீர்கள்..:) .. கட்டாயமாக உங்கள் கருத்து உண்மைதான். அந்த படத்தில் பேசியவர்களிலேயே பசுபதி கொஞ்சம் தேறுவதாக நினைத்தேன்.. அதாவது மற்றவர்கள் அதைவிட மோசம்..

பாராட்டுக்கு நன்றி தேனம்மை

கட்டாயம் படிங்க சின்ன அம்மணி

கமலேஷ் said...

மிகவும் நல்ல பதிவு
நண்பரே வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

மிகவும் நல்ல பதிவு
நண்பரே வாழ்த்துக்கள்...

வினோத்கெளதம் said...

//ந்த கடைசி காட்சி.. சிம்ரன், கீர்த்தனா, நந்திதா, மாதவன், பிரகாஷ்ராஜ், பசுபதி என முகங்கள் மாறி மாறி.. உணர்ச்சிக் குவியல். ரஹ்மான் காட்சிக்கு அழகு சேர்க்க, மழை அழகுக்கு அழகு.//

தல..இந்த காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி விடுகின்றது.
நீங்கள் அழகாக வார்தைப்படுத்தி உள்ளீர்கள்..

தியாவின் பேனா said...

நல்ல பகிர்வு

PPattian : புபட்டியன் said...

நன்றி தியாவின் பேனா