Friday, January 29, 2010

JBJ மோசடியும் நினைவோடையும்

கீழ் மத்திய தர, நடுத்தர, மிடில் கிளாஸ்.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்களில் பலர் நடுத்தரமாகப் பிறந்து, நடுத்தரமாக வளர்ந்து, கனவுகள் கண்டு அந்தக் கனவுகள், கனவுகளாகவே மரித்துப் போவதுதான் வழக்கம். ஒரு வீடு, ஒரு நிலம், ஒரு காணி என்பதெல்லாம் அவர்களின் பிரதானைய கனவு, கொஞ்சமாக அந்தஸ்து சின்னம் கூட. அந்த வர்க்கத்தை சுரண்டுவதற்கே முளைத்து வரும் நிறுவனங்கள் மச்சம் ஒட்டிக் கொண்டோ, ஒட்டு தாடி வைத்துக் கொண்டோ வந்த வண்ணம்தான் இருக்கின்றன.. அதிக வட்டி என்னும் மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சீட்டு கட்டுதலில் இருந்து மீண்டு வரும் வேளையில், தவணை முறையில் பணம் கட்டி நிலமும், வீடும் பெறு என்றதும், கனவுகளின் மீளமுடியா உந்தல்.. இப்போது கண்ணீரில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.


"ஆறு வருஷமா கட்டிட்டு வரேங்க.. இன்னும் ரெண்டு மாசந்தான் அப்புறம் நிலம் எனக்கு சொந்தம்னு நெனச்சேன்", என்று கண்ணீருடன் கூறுகிறார் ஒரு பெரியவர் டி.வியில். அதே போல் பலரும், பெண்களும் கூட. விராலி மலைக்கும் கொட்டாம்பட்டிக்கும் இடையில் பொட்டல் காட்டிலாவது, கும்மிடிப்பூண்டி தாண்டி கூடுவாஞ்சேரி தாண்டியாவது எங்காவது ஒரு சில ஸ்கொயர் ஃபீட்டுகள்.. அவ்வளவே கனவு. அவர்களெல்லாம் கட்டாயமாக வியர்வை சிந்த உழைத்துதான் இந்த பணத்தை தேடியிருப்பார்கள். இன்று நட்டாற்றில்.

இதில் என் தவறு எதுவும் இல்லை, என் முகவர்கள் செய்த தவறுதான் என்கிறார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர். ஆயிரம் கோடிகள் களவாடப்படும் வரையா முகவர்களின் தவறு தெரிய வராது? மோசடி செய்யும் எண்ணம் இல்லை என்றால் எதற்கு அந்த உரிமையாளரின் மனைவி தலைமறைவாக வேண்டும்? இன்னும் கேள்விகள் பலப்பல.. ஆனால் கொடுத்தவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்.

-----------------------

பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. கொழும்புவில் திவாலான ஒரு இன்வெஸ்ட்மென்ட் கம்ப்பெனிக்கு சென்றிருந்தேன். எண்பதுகளின் இறுதியில் திவாலான நிறுவனம் அது. வாசலில் ஒரே ஒரு வயதான செக்காவும், உள்ளே இன்னொரு வயதான, ஆனால் நல்ல ஆங்கிலத்தில் உரையாடக் கூடிய ஒரு குமாஸ்தாவும் மட்டுமே இருந்தனர்.


எண்பத்துமூன்றில் அப்பா வைத்திருந்த கடை அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டபோது அந்த கவலை கூட அறியமுடியா சிறுவன் நான். சிதிலமாகக் கிடந்த கடையில் ஓடி விளையாடினேன். ஒன்றும் இல்லாமல் நின்ற அப்பாவுக்கு அதிர்ஷ்டவசமாக(?!) காப்பீடு மூலம் இரண்டரை லட்சங்கள் கிடைத்தன. அதை வைத்து மீண்டும் கடை வைக்கும் யோசனைகளையெல்லாம் நிராகரித்தார். 84 ல் கடை, 85 ல் அடி, 86 ல் கடை, 87 ல் அடி என்றெல்லாம் காலம் ஓட்ட முடியாது என்று நினைத்திருப்பார் போல. ஆனால் பாருங்கள் 83க்கு அப்புறம் மத்திய மாகாணத்தில் அப்படி அசம்பாவிதம் நடக்கவே இல்லை.

அந்த சமயத்தில்தான் கடை விரித்து அதி.....க வட்டியுடன் கவர்ந்திழுத்தது அந்த நிறுவனம். அதன் ஹிஸ்டரி, ட்ராக் ரெக்கார்ட் என எதுவும் பார்த்தாரா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அந்த பணம் அங்கு முடக்கப்பட்டது. முதல் இரண்டு மாதங்கள் கவர்ச்சியான வட்டிதான், பின்னர் பல்லிளிக்கத் தொடங்கியது.

வண்டவாளம் தண்டவாளம் என ஆனபின் மத்திய வங்கி தலையீட்டால் பணம் திரும்பக் கிடைக்கும் என்று வாக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கவும் பட்டது. 1024, 616, 2129, 3251 என்று ரேண்டம் எண்கள் தாங்கிய காசோலைகள், அதே ரேண்டம் நாட்களில் ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒன்றாக வந்த வண்ணம் இருந்தது.. முதல் மட்டும்தான், வட்டியெல்லாம் நினைத்து கூட பார்க்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் காசோலை வந்த கொஞ்ச நாட்களிலேயே செலவும் ஆகிவிடும் என்பது தெரிந்ததுதானே. இப்படி பல வருடங்கள் இழுத்து இழுத்து உருண்டோடிய வழங்கல் ஒரு கட்டத்தில் சுத்தமாக நின்று விட்டது.

லட்சம் எங்கோ முடக்கப்பட்டது அறியாமல் லோயர் மிடில் க்லாஸாகவே காலம் தள்ளி முட்டி மோதிய நான் கடைசியில் கொழும்புவில் தங்கியிருந்த நேரம் அந்த நிறுவனத்திடம் சென்று "என்ன ஆச்சு?" என்று கேட்டு வருமாறு பணிக்கப்பட்டேன்.

உற்சாகமாக வரவேற்று நன்றாகவே பேசினார் அந்த குமாஸ்தா. மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டவர். வழக்கு நடைபெறுவதாகவும் அடுத்த தவணைகள் எப்போது ஆரம்பிக்கும் என்று கூடிய விரைவிலேயே நோட்டீஸ் அனுப்பப்படும் என்று (எல்லோருக்கும் சொன்னதையே எனக்கும்) சொன்னார். பின்னர் நான் நாற்காலியில் இருந்து எழுந்து புறப்படும்போது சொன்னார் அந்த வார்த்தைகளை, "இந்த கம்பெனியில் பணத்தைப் போடுவதற்குப் பதிலாக உங்கள் அப்பா 85லேயே ராஜகிரிய பக்கம் ஒரு பத்து பேர்ச் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்".

 எனக்கு புல்லரித்தது. "கோடீஸ்வரன்", என சிலாகித்துக் கொண்டே மே மாத சுட்டெரிக்கும் வெயிலில் யூனியன் பிளேஸ் முழுதும் நடந்தேன்.

--------------------

அப்பாவின் அனுபவத்தாலேயே என்னவோ எனக்கு தவணை முறை, அதிக வட்டி என்ற வார்த்தைகளெல்லாம் கடுமையான அலர்ஜி. என் நண்பர்கள் சிலர் சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் வந்து எத்தனையோ முறை அழைத்தும் ஒவ்வொரு முறையும் பண்பாக மறுத்து விடுவேன். பொதுவாக எனக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க்குடன் வெடிமருந்தை கலந்து சாப்பிடுவது போன்றது.


சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக எனக்கு அனுப்பபட்டது. அதில் 6334 ரூபாய்க்கான காசோலையுடன், "இது உங்கள் இறுதி தவணை. இத்துடன் உங்கள் முதல் முற்றிலுமாக வழங்கப்பட்டு விட்டது" என்று ஒரு கடிதம். அதைப் பார்க்க அப்பாதான் உயிரோடு இல்லை.

7 comments:

My days(Gops) said...

sillarai sillarai ah koduthu mothamaah vaangurathukum

mothamah koduthadhu sillarai ah varadhukkum

evalavu vithiyasam iruku paarunga brother :( ...

//பொதுவாக எனக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க்குடன் வெடிமருந்தை கலந்து சாப்பிடுவது போன்றது.
//

appadiey palakkam illaatium, amadhiah irupadhey better... :) ...

edhuku SSS vaipaaney....

SSS = Sondha Selavula Sooniam :)

PPattian : புபட்டியன் said...

வாங்க My days(Gops).. பாத்து ரொம்ப நாள் ஆச்சு!!

சில்லறை சில்லறையா குடுத்து மொத்தமா வாங்கறது இறுதியில் கொண்டாட்டம் .. மொத்தமா குடுத்து சில்லறை சில்லறையா வாங்குதல் நிரந்தர மன உளைச்சல்.. :)

thenammailakshmanan said...

நீங்க சொன்னது அனைத்துமே உண்மை பட்டியன்..
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு பணம் போவது கேள்விப் பட்டதுதான் ..

ஆனால் வாங்கிய இடம் போவது ரொம்ப வேதனையான ஒன்று

PPattian : புபட்டியன் said...

(யாத்திரைக்குப் பிறகு) வருக தேனம்மை :)

//அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு பணம் போவது கேள்விப் பட்டதுதான் ..//

ஆம் பெரும்பாலும் மிடில் கிலாஸ் மக்கள்தான் இதில் அகப்படுகிறார்கள்..

சின்ன அம்மிணி said...

கடைசீல அப்பா பத்தி சொல்லி கண்கலங்க வைச்சிட்டீங்க.
இந்த சீட்டு, சிட்பண்ட் இதிலெல்லாம் போய் மாட்டிக்காதீங்கன்னு வீட்டிலயும் எல்லார்கிட்டயும் நான் அப்பப்ப சொல்வதுண்டு.

PPattian : புபட்டியன் said...

கருத்துக்கு நன்றி சின்ன அம்மிணி

//இந்த சீட்டு, சிட்பண்ட் இதிலெல்லாம் போய் மாட்டிக்காதீங்கன்னு வீட்டிலயும் எல்லார்கிட்டயும் நான் அப்பப்ப சொல்வதுண்டு//

சில சமயம் நேர்மையா தொழில் செய்யணும்னு நினைச்சு சிட்பண்ட்ஸ் ஆரம்பிக்கும் சிலர் கூட நாளடைவில் சபலம் தட்டியோ அல்லது மோசமான மேலாண்மையாலோ (பணத்துடன்) ஓடுவதுண்டு.. கவனம் கட்டாயம் தேவை.

thenammailakshmanan said...

enna aachu Padttiyan onnum ezuthala


then one request

PLz add the followers gadget

so that we can follow ur blog and drop commments easily