Tuesday, February 23, 2010

பிங்க் சட்டை

நரேஷ் காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தார். குழியும் பருவுமாக இருந்த அவர் முகம் சிவந்து இன்னும் விகாரமாகத் தெரிந்தது. F வார்த்தைகளும், D வார்த்தைகளும், B வார்த்தைகளும் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.

மோகன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். கண்களோரம் வழிந்து விடத் தயாராக இருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். ஏதும் பேச முற்படவில்லை, பேசினால் அழுவது திண்ணம். அவன் கூடவே நின்று கொண்டிருந்த சக அடிமைகளில் சிலர் மோகனுக்காக கவலைப்பட்டு தலை குனிந்து நின்றனர். மற்றவரும் தலை குனிந்தே நின்றனர், ஆனால் ஒரு நமுட்டுச் சிரிப்பு வாயில் தொக்கி நின்றது.

LAN எனப்படும் லோக்கல் ஏரியா நெட்வர்க் அமைத்துக் கொடுக்கும் ஒரு சிறிய நிறுவனம் அது. LAN தேவைப்படும் வாடிக்கையாளர்களின் அலுவலகத்துக்குச் சென்று எத்தனை நோடுகள், ஹப் அல்லது ஸ்விட்சிலிருந்து ஒவ்வொரு நோடுக்கும் தேவைப்படும் கேபிள் எவ்வளவு என்று அளந்து அதனுடன் தேவைப்படும் இன்ன பிற பொருட்களும், லேபர் எனப்படும் உழைப்புக்கும் சேர்த்து கடைசியில் 10 சதவீதம் மார்க்-அப் வைத்து வாடிக்கையாளருக்கு ப்ரப்போஸல் கொடுக்கும் வேலை மோகனுக்கு.

அப்படி கொடுக்கப்பட்ட ஒரு ப்ரப்போஸலில் ஏற்பட்ட தவறுதான் இப்போது இந்த உருவெடுத்திருக்கிறது. "Two hundred thoushands damn it.. I have no other option but to recover it from your salary", சொற்ப கால அமெரிக்க அனுபவத்தை பறைசாற்ற, நரேஷ் லட்சத்தை ஹன்ட்ரல் தௌஸன்ட் என்றும், பத்து லட்சத்தை மில்லியன் என்றுமே சொல்வார்.

விறுவிறுவென வெளியே வந்து தூங்கிக் கொண்டிருந்த கணினியை உயிர்ப்பித்து "It is with great regret I tender my" என்று தட்டிக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தான் அவன் அணிந்திருந்த சட்டையை.

இளஞ்சிவப்பு என்றோ வெள்ளை என்றோ சொல்லமுடியாத இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். “100% காட்டன்” உடன் ஒரு பிரபல ஷர்ட் கம்பெனியின் பெயர் எழுதப்பட்ட லேபிள் உடையது. நன்றாக இஸ்திரி செய்து அணிந்தால் மிடுக்கான தோற்றம் தரும். மோகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த நலங்கு வைபவத்துக்கு உறவினர் ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தது. நீண்ட நாட்களாக பேக்கிங் பிரிக்கப்படாமல் பீரோவில் கிடந்ததை எடுத்து முதல் முதலாக அணிந்த நாள் மறக்க முடியாதது.

மழையே கண்டிராத ஒரு மாதம் அது. தெருவில் எல்லோரும் தன் புதுச் சட்டையையே பார்ப்பது போல் தோன்றியது மோகனுக்கு. மிடுக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அந்த நிறுத்தம் ஒரு கடைக்கு முன்னால் அமைந்திருந்தது. கடை வாசல் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது. ஓரிரண்டு பேருந்துகள் வந்து போயின. மோகன் வழக்கமாகப் போகும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியது.. சடாரென பேருந்தின் ஒரு சக்கரம் குழிக்குள் இறங்க.. சேறு அபிஷேகம் மோகனின் மேல். அங்கு அவ்வளவு பேர் நின்றிருந்தும் சரியாக மோகன் மீது மட்டும் வாசல் கழுவப்பட்ட நீர் முழுதும்.

அதற்குப்பின் ஒரு நாள் அவன் ஏறிய அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெருங்கூட்டம் ஏற மோகன் வியர்வையில் குளித்து அந்த பிங்க் சட்டை கசங்கி, நசுங்கிப் போனது. அன்று அலுவலகம் முழுதும் மோகனின் சட்டைதான் பேச்சுப் பொருள், "ஏம்ப்பா, நா வேணா ஒனக்கு ஒரு அயன் பாக்ஸ் வாங்கித் தரவா?", "என்னடா சட்டையை தொவைக்கிற வழக்கமே இல்லையா", "கைப்புள்ள கணக்கா ரணகளமா இருக்கடா".

ஒவ்வொரு முறை பிங்க் சட்டை அணியும்போதும் ஏதாவது நடந்தது. சாலையில் ஆட்டோக்காரன் வந்து மோதினான். நரேஷ் ஏதாவது ஒரு அல்பைக் காரணத்தைக் கொண்டு காய்ச்சினார். வாடிக்கையாளரிடம் இருந்து வசை, பெருமழையில் நனைந்து தொப்பல், பேனாவோ, கிரிம்பிங் டூலோ காணாமல் போனது, குறைந்தபட்சம் லாவண்யாவுடனாவது சண்டை..இப்படி.. நடந்து கொண்டே இருந்தது. கடைசியாக அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு சைட் சர்வேக்கு போகும்போது கூட பிங்க் சட்டைதான்.

வீட்டில் நுழைந்ததும் சட்டையை கழற்றி கசக்கி எறிந்ததில் இருந்த கோபத்தைப் பார்த்த லாவண்யா, "என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ கோவம்?" என்றதற்கு, "தலைய சுத்தி தூக்கி எறி அந்த சனியன" என்றான். "ஆமா, நீங்க கவனமில்லாம ஏதாவது குளறுபடி செஞ்சிட்டு அந்த சட்டை மேல ஏன் எறிச்சல் படுறீங்க", என்றாள்.

மறுநாள் காலை தலையை துவட்டியபடி, துண்டை உலர்த்துவதற்காக மொட்டை மாடி ஏறியபோது, பிங்க் சட்டை காற்றில் படபடத்தது. நீல சட்டை, வெள்ளை சட்டை, ஆரஞ்ச் சட்டைகளுக்கு மத்தியில் இதுவும் சடசடத்தது. ஒரு குரூரப் பார்வையுடன் அதன் அருகே சென்ற மோகன் அதன் காலர் அருகே கொடியோடு சேர்த்து குத்தப்பட்டிருந்த இரண்டு கிளிப்புகளையும் மெதுவாக கழற்றினான். "இந்த ஆடிக்காத்தில இன்னும் எவ்ளோ நேரம் ஆடுவ", என்று சட்டையைப் பார்த்து நக்கலாகக் கேட்டான்.

அவனுக்கு மிகவும் ராசியான இளம்பச்சை சட்டையை அணிந்து கொண்டான். சாலையில் யாரும் மோதாமல் கவனமாக நடந்தான். பேருந்து நிறுத்தத்தில் அந்த குழி நிரவப்பட்டிருந்தது. கூட்டமில்லாத பேருந்து கிடைத்தது. அதில் சன்னலோர இருக்கை கூட கிடைத்தது. உற்சாகமாக அலுவலகத்துக்குள் நுழைந்தான். "ஹாய்!", "ஹல்லோ", "குட் மார்னிங்" ஊடே இருக்கை வந்து சேர்ந்தான். கணினியை உய்ர்ப்பிக்கும் சமயம் திடீரென்று பிங்க் சட்டை ஞாபகம் வந்தது.

"இன்னேரம் பறந்து போயிருக்குமோ.. ஒருவேளை நான் ஆபீஸ் வந்ததுமே லாவண்யா மொட்டை மாடிக்குப் போயிருந்தா.. போனாலும் பாத்திருப்பாளா.. பாத்தாலும் திரும்ப வந்து கிளிப் எடுக்குமுன்ன பறந்துட்டா.. சேச்சே அவ என்ன முட்டாளா, ப்ளூ சட்டை கிளிப்புல ஒண்ண கழட்டி போட்டிருப்பாளோ? ஒருவேளை அது பறந்து பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குப் போயிருந்தா,, பக்கத்து வீட்டு மாமி எடுத்து இது உங்களுதான்னு கேட்டுக் கொடுத்திருக்குமோ.. யார் கண்டா ஒரு வேளை சாயங்காலம் நான் வீட்டுக்குப் போகும்போது அந்த சோமண்டி பிச்சைக்காரன் பிங்க் சட்டையோட என் முன்னாடி நடந்து போனாலும் போகலாம், அவனவன் ஒடம்ப மறைக்க ஒரு சட்டை இல்லாம இருக்கிற காலத்தில நான் அவ்ளொ காஸ்ட்லி சட்டைய இப்ப்டி.. சேச்சே என்ன ஆனாலும் எவ்ளோ கஷ்டம் குடுத்துச்சி.. தொலையட்டும்.. ஒருவேளை....ட்ரிங்..ட்ரிங்", சட்டென சிந்தனை கலைந்தது.

அவன் மேசையிலிருந்த தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது.

18 comments:

சின்ன அம்மிணி said...

அந்த தொலைபேசில என்ன சேதி அவனுக்கு காத்துகிட்டு இருக்கோ :)

சின்ன அம்மிணி said...

அந்த சட்டை திரும்ப கிடைக்கும்னு ஒரு நப்பாசை இருந்தமாதிரி தோணிச்சி

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஃப்ளோ நன்றாகயிருந்தது. ஆனால் கதை அழுத்தமில்லாமல் லைட்டாக இருப்பதைப்போல ஒரு உணர்வு.

PPattian : புபட்டியன் said...

வாங்க சின்ன அம்மிணி

//அந்த தொலைபேசில என்ன சேதி அவனுக்கு காத்துகிட்டு இருக்கோ :)//

யாரா இருக்கும்? :)

//அந்த சட்டை திரும்ப கிடைக்கும்னு ஒரு நப்பாசை இருந்தமாதிரி தோணிச்சி//

அந்த நப்பாசை வராம இருக்குமா..

PPattian : புபட்டியன் said...

வாங்க ஆதிமூலகிருஷ்ணன், கருத்துக்கு நன்றி

//கதை அழுத்தமில்லாமல் லைட்டாக இருப்பதைப்போல ஒரு உணர்வு//

எழுதி முடிச்சதும் எனக்கும் அப்படி தோணிச்சு.. ஆனா, ரொம்ப மோசமான சம்பவங்கள் நிகழ்வதாகக் காட்டி, மோகன் மன உளைச்சலுக்கு ஆளாகி... இப்படி கொண்டு போகணும்னு தோணலை.. லைட்டாவே இருக்கட்டும்னு விட்டுட்டேன்..

வினோத்கெளதம் said...

தல கதை ஃப்ளோ அருமை..கடைசியா 'ட்விஸ்ட்' எதிர்ப்பார்த்தேன் ..

PPattian : புபட்டியன் said...

நன்றி வினோத்கௌதம்

ட்விஸ்ட் இல்லாமல் இருந்ததுதான் ட்விஸ்ட் :)

thenammailakshmanan said...

கதை நல்ல இருக்கு பட்டியன் இப்படிதான் நாமளா அவலை நினைச்சு உரலை இடிப்போம் சட்டை கிடைச்சுதா

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு..

PPattian : புபட்டியன் said...

நன்றி தேனம்மை. Followers Gadget இப்போ சேத்துட்டேன் :)

நன்றி புலவன் புலிகேசி

My days(Gops) said...

ayoyo, brother ennadhu idhu.... kadhai'in end enna? :(

to be continued? or illai naangaley mudiva mudivu pannika vendiadhu thaaanah? enna koduma sir idhu :(

PPattian : புபட்டியன் said...

கோப்ஸ் தம்பி.. கதை முடிவு உங்கள் கையில்.. Sequel எழுதுவத்ற்கு இதென்ன அவதார் படமா? :)

கண்மணி/kanmani said...

நல்லாருக்கு.முடிவு என்னன்னு தெரியாமப் போச்சே.
நானும் ஒரு பிளாக் அண்ட் ரெட் சாரி கட்டும் போதெல்லாம் இப்படி ஏதாவது...
முதல்முறை தீபாவளி ராக்கெட் நெருப்புப் பொறி
அடுத்த முறை..கீழே வழுக்கி விழுந்தேன்
அடுத்த முறை மனசு கஷ்டமான சேதி...
ஆனால் எல்லாமே லேசான பாதிப்புகள்தான் .இருந்தாலும் ..

இது மூடத்தனம்னு அறிவு சொன்னாலும் மனசு சமாதானம் ஆகலை

PPattian : புபட்டியன் said...

நன்றி கண்மணி.. மூணாவது டைப்னு நிரூபிச்சிட்டீங்க :)

//இது மூடத்தனம்னு அறிவு சொன்னாலும் மனசு சமாதானம் ஆகலை//

அதே.. அதே..

My days(Gops) said...

//Sequel எழுதுவத்ற்கு இதென்ன அவதார் படமா? :)//

aaha, brother any inside kuthu maadhiriey iruku ley :)

thenammailakshmanan said...

thanks pattiyan for adding followers gadget
now i can read it from by dash board itself ..thanks..

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in