Monday, April 19, 2010

பிளாஸ்டிக்.. சாத்தானல்ல, தேவதை

கொஞ்சமாக கொசுவத்தி சுத்திப் பார்த்தால், "ஹரி கொஞ்சம் கடைக்குப் போய்ட்டு வாடா", என்ற அம்மாவின் குரல் கேட்கிறது. வீட்டின் கடைசி ஆண்பிள்ளை என்பதால் (எனக்கப்புறம் ஒரு தங்கை), கடைக்கு போகும் வேலை என் மேலே திணிக்கப்படும். ஒரு கையடக்க அக்கவுண்ட் நோட்புக்கும், மஞ்ச பையுமா காந்தி கடை நோக்கி பயணம் ஆரம்பிக்கும். கேஷ் கஸ்டமரை விட கிரெடிட் கஸ்டமருக்கு MRPக்கும் மேலே 25 பைசா அதிகம் வசூலிக்கப்படும் என்று தெரிந்தாலும், மாசக் கடைசியில் எவ்வளவு செலவு ஆனது?, சர்க்கரை எவ்வளவு?, பருப்பு எவ்வளவு?, எது வீண் செலவு? என்று KM செய்ய முடியும் என்பதால் அக்கவுண்ட் கஸ்டமர்தான். இதுல இந்த இடுகைக்கு தொடர்புடையது அந்த மஞ்ச பைதான். அது மட்டும்தான்.

சாரதாஸ், ஆனந்தா சில்க் பாரடைஸ் அல்லது யாராவது “பெரிய” பார்ட்டி கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட "மஞ்ச பை" என்று அழைக்கப்படும், மஞ்சளில் அல்லது வெள்ளையில், சிகப்போ அல்லது மரூனோ கொண்டு எழுதப்பட்டு, இரண்டு காதுகளுடன் காட்சி தரும் அந்த பைகள் பற்றி இந்த தலைமுறைக்கு (ஆமா, நான் கொஞ்சமா போன தலைமுறைதான்) ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தீபாவளிக்கு துணி எடுக்கும்போது ரெண்டு மஞ்ச பை எக்ஸ்ட்ராவாய் வாங்கி வைத்தாலும், காது அறுந்தோ, அடியில் ஓட்டை விழுந்தோ பைகள் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவசரத் தேவைக்கு ஒரு பையும் கிடைக்காது. அதில் கொஞ்சம் "மர்பி"யின் விதி வேறு விளையாடும். என் நண்பர்கள் பலர் பள்ளிக்கே மஞ்ச பையில்தான் புத்தகம் கொண்டு வருவார்கள். பள்ளி மணியடித்தால் கேட்கும் தொலைவில் வீடு இருந்ததால், பத்தாம் வகுப்பு வரைக்கும், காலேஜ் பையன் போல புத்தகங்களை ஸ்டைலாக கையில் எடுத்து போவது வாய்த்தது எனக்கு.

கடையில் கேட்கும் பொருள் எல்லாம் பேப்பர் பொட்டலமாகும். 50 கிராமுக்கு சிறிய உள்ளங்கை பொட்டலம். அரை கிலோவுக்கு கூர் (Cone Shape) போல செய்து அதில் பொருள் போட்டு, சணல் கொண்டு இறுக்கப்படும் பொட்டலம். அது ஒரு கலை.. எனக்கு அதில் ஒரு வருட அனுபவம் உண்டு.

பிளாஸ்டிக் பை கலாச்சாரம் எப்போது ஆரம்பித்தது என்று கொஞ்சமாக நினைவு இருக்கிறது. 90களின் ஆரம்பத்தில், பை எதுவும் எடுக்காமல் கடைக்குப் போனாலோ அல்லது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பழம் வாங்கினாலோ.. 25 பைசாவோ, 50 பைசாவோ வாங்கிக் கொண்டு கொடுப்பார்கள்.. "கேரி பேக்" கொஞ்சமாக அதன் கோர மூக்கை நுழைக்கத் தொடங்கிய காலம்.

கொஞ்சமாய் கொசுவத்தி புகை விலகும்போது நான் பை எதுவும் எடுக்காமல் சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன். தேவையான பொருட்களை வாங்கி வீடு திரும்பும்போது.. மொத்தமாக ஒரு பத்து பிளாஸ்டிக் பைகள். ஒவ்வொரு காய்க்கும் ஒன்று, பழங்களுக்கு ஒன்று, பாலுக்கு ஒன்று, டிட்டெர்ஜென்ட், சோப்பு வகைக்கு ஒன்று.. கடைசியில் எல்லா சின்ன பைகளும் ஒரு பெரிய பையில்.

ஆரம்பத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கடைக்குப் போனோமா, கிடைத்த பைகளை ஒரு பெரிய பையில் போட்டோமா என்று போனது காலம். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு ஜந்து கால் பரப்புவது போல ஒரு உணர்வு. வீட்டின் பல இடங்களில் பிளாஸ்டிக் பை மயம். ஏதோ ஒரு குற்ற உணர்வு. திடீரென்று ஒரு நாள் ஞானோதயம் எனக்கும் என் மனைவிக்கும். இனி கடைக்குப் போகும்போது வீட்டில் இருந்தே பை எடுத்துப்போவது. இருக்கும் பைகளை ஒவ்வொன்றாக குப்பை போட பயன்படுத்தும் பட்சத்தில் பைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.. எப்பூடி?..

ஆனால் இந்த திட்டம் மூளையில் தங்க வேண்டுமே.. கடை வரை போய் திரும்பி வீட்டுக்கு வந்த நாட்கள் பல. வீட்டுக்கு அருகில் இருக்கும் ரிலையன்ஸ் ப்ரெஷ்ஷில் கையில் இருக்கும் பையை கொடுக்கும்போது, "என்னது?", என்று வித்தியாசமாகப் பார்த்தார்கள். கொஞ்ச நாளிலேயே என்னைப் பார்த்ததும், ஒரு குறும்பு புன்னகையுடன் பையை வாங்கிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர்.

அப்போதும் பைகள் குறைந்த பாடில்லை. பைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் குப்பையில் போட மனம் வரவில்லை. இருக்கும் பைகள் எல்லாம் அழகாக மடித்து ரிலையன்சுக்கே எடுத்துச் சென்றேன். முதலில் வாங்க மறுத்தனர். காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று வலியுறுத்தியதும் வாங்கிக் கொண்டார் சூபர்வைசர். ஆனால் அவை முறையாக பயன்படுத்தப் பட்டதா இல்லை குப்பையில் எறியப்பட்டதா எனத் தெரியாது.

இதில் இடையிடையே இணையத்தில் பிளாஸ்டிக் குறித்த ஆய்வு வேறு. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் தண்டவாள ஓரத்தில் கிடக்கும் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் தரும் பயத்தில், “இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பிளாஸ்டிக்” எனக் கேட்ட எனக்கு, இணையம் அதிர்ச்சி தந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனித பிளாஸ்டிக் பயன்பாடு, இந்தியாவைப் போல நூறு மடங்கு அதிகமாம். அமெரிக்க சினிமாக்களில், கடையில் பொருட்கள் வாங்கியபின் மொடமொடவென காகிதப் பையை மார்போடு அணைத்து வரும் நாயகிகளைப் பார்த்து பழகிப்போன எனக்கு முதன் முதலில் வால்மார்ட் போனபோது பேரதிர்ச்சி... அவர்களும் பிளாஸ்டிக் பைகளையே திணித்தனர்.

"இப்படி மொத்தமான பிளாஸ்டிக் பைகளை தருகிறார்களே, இவை எப்படி மட்கும். இதைவிட இந்தியாவின் பெட்டிக்கடைகளில் தரும் பைகள் தேவலாமே.. அவை மெல்லியதாகவாவது இருக்கிறதே".. எப்படியெல்லாம் மனக்குறை பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்கள் மீது. மேலும் இணைய ஆராய்ச்சி தந்தது தெளிவு. பிளாஸ்டிக்கை முறையாக ரீசைக்கிள் (மறுசுழற்சி?) செய்ய குறைந்த்து 25 மைக்ரான்கள் தடிமன் (Thinkness) தேவை.

அப்படின்னா.. ஆங், சூபர் மார்க்கெட்டில் கொடுக்கப்படும் பைகளில் முக்கோண வடிவில் இணைக்கும் மூன்று அம்புக் குறிகள் உண்டு. பெட்டிகடைகளில் அதுவும் இல்லை. முடிந்தவரை பெட்டிக் கடை பைகளை மறுத்தேன். அமெரிக்கா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகம் என்றாலும், அவை முறையாக ரீசைக்கிள் செய்யப்படுகின்றன. நாம்? முறையான டிஸ்போசல் திட்டங்கள் இல்லாமலேயே பயன்பாடு பெருக்கி விட்டோம்.

இப்படி போய்க் கொண்டிருந்த நாட்களில்தான், ஒருநாள், நிம்மதி வீடுதேடி வந்தது. மாநராட்சி ஊழியர்கள் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையுடன் கதவைத் தட்டினர். "எல்லா பிளாஸ்டிக் ஜாமானத்தையும் இதில போட்டு வைங்க.. ரெண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி வந்து எடுத்துக்கறோம்.. கிலோவுக்கு ரெண்டு ரூவா",

"நாங்க கொடுக்கணுமா", கொடுக்கவும் தயாராக இருந்தோம்

"இல்ல.. நாங்க கொடுப்போம்".. WOW (Wealth Out of Waste) என்று ஒரு திட்டம்.

அடுத்த சில வாரங்கள், வீட்டில் தேடித்தேடி பிளாஸ்டிக் பொருட்களை அந்த பையில் போட்டுச் சேர்த்தோம். பால் கவர்கள், மளிகை பொருட்கள் கவர்கள், கோக், லிம்கா பாட்டில்கள் என்று எல்லாமும் மிகக் கவனத்துடன் அந்தப் பையைச் சேர்ந்தன. இரண்டு வாரங்கள்.. மூன்று வாரங்கள்.. ஒரு மாதம். WOW குழு வரவே இல்லை. பை நிரம்பி வழிந்தது. என் மனைவி கொஞ்சம் சோர்வுடன் சாதாரண குப்பையிலேயே எல்லா பிளாஸ்டிக்கையும் போடத் தொடங்கினார். லோக்கலில், மூன்று சக்கர வாகனத்தில் வரும் ரெகுலர் குப்பைக்காரர் கொஞ்சம் எனக்கு ப்ரெண்ட். தீபாவளி, பொங்கல் என்றில்லாமல் பல நேரங்களிம் பத்து, இருபது என்று கொடுப்பேன். கொஞ்சமாக என் சமூக அக்கறை சார்ந்த குற்ற உணர்வை குறைக்கும் அது. அவரிடம் கேட்கும்போது, "நாங்க கடைசியா எல்லா பிரிச்சுடுவோம், நீங்க இதிலேயே கொட்டுங்க என்றார். அரை மனதுடன் கொட்டினேன்.

எல்லாவற்றையும் பிரிப்பார்களா? எப்படி. ஏதாவது இயந்திரம் இருக்கிறதா? அல்லது மனிதர்கள் தானா. நாம் அருவருப்புடன் வீசும் குப்பையை, அதன் நடுவே நின்று தரம் பிரிக்கும் அந்த ஆத்மாக்கள் யார்? இப்படி பல கேள்விகள்.

இப்போது இரண்டு மாதமாக WOW குழுவினர் கொஞ்சம் தலை காட்டத் தொடங்கியுள்ளனர். கொஞ்சம் நிம்மதி, நம்பிக்கை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிளாஸ்டிக் என்று ஒன்று இல்லாமல் இருந்தால் எல்லாவற்றுக்கும் மரங்கள் தான் வெட்டப்படும். நீல்கமல் போன்ற இருக்கைகள் எங்கும் நிறைந்துள்ளன, அவை இல்லாவிட்டால், இரும்புத் தாதும், மரங்களும்தான் அந்த இடத்தை நிறைத்து இருக்கும். பிளாஸ்டிக் ஒரு கொடை. ஆனால், அது சரியாக மீள்சுழற்சி செய்யப்பட வேண்டும். மக்கள் பிளாஸ்டிக் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற வேண்டும். அரசு அதற்கு விளம்பரங்கள் செய்ய வேண்டும் (பயன்படுத்த வேண்டாம் என்றில்லை.. பயன்படுத்துங்கள்.. ஆனால் சரியான முறையில் என்று).

இலங்கையில் பிளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி பெட்ரோல் தயாரிப்பு நடைபெறுகிறது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வண்டிகளுக்கு அது பயனபடுகிறதாம். அது எவ்வளவு வெற்றிகரமானது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். ஆனால், அது சரியானதாக இருக்கும் பட்சத்தில் இதுபோல இன்னும் நிறைய தேவை நமக்கு.

HP நிறுவனம் அதன் பிரிண்டர் கார்ட்ரிட்ஜ்கள் பிளாஸ்டிக் குப்பையில் இருந்து தயாரிக்கப்படுவதாக அறியத் தருகிறது. அடுத்த பதிவில் பிளாஸ்டிக் குறித்து இன்னும் அதிகமாக எழுதுவேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் என் Google தேடல் பெரும்பாலும் "பிளாஸ்டிக்" தான்.

திடீரென்று சந்நியாசம் பூண்டு சென்னையில் இருந்து திருச்சி வரை தண்டவாளம் அருகே கால் நடையாய் நடந்து அந்த பிளாஸ்டிக் குப்பை எல்லாம் அகற்றலாமா என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால், மறுநிமிடமே, "Rat race" ஞாபகம் வந்து விடும். இன்னமும் என் சொந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயன்று கொண்டிருக்கிறேன். ஆனாலும் சௌகரியம், சோம்பேறித்தனம் எல்லாம் வந்து அவ்வப்போது கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏன்னா," எம்ஜீயாரும் இல்லை.. நம்பியாரும் இல்லை.. நானெல்லாம் நடுவிலதான்" :)

32 comments:

மங்களூர் சிவா said...

very nice.

கண்மணி/kanmani said...

வித்தியாசமான கோணம்.
பயனுள்ள சிந்திக்கத் தூண்டும் பதிவு

விஜய் said...

சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வை கூட அழகா கொசுவத்தி சுத்தி எழுதிட்டீங்களே

வாழ்த்துக்கள்

(என்ன சொன்னாலும் நம்மூரு நம்மூரு தான்)

விஜய்

PPattian : புபட்டியன் said...

நன்றி மங்களூர் சிவா.. வழக்கமா ரிப்பீட்டேய் போடுவீங்க.. ஆனா இங்க முதல் ஆளா பின்னூட்டிட்டீங்க. டாங்ஸ்..:)

நன்றி கண்மணி டீச்சர்

நன்றி விஜய் சார்.. ஆமா, சொர்க்கமே என்றாலும் அது திருச்சி போல வருமா :)

உமா said...

மிக அற்புதமான தெளிவான பதிவு. துணிப் பை எடுத்துப் போவதை வித்தியாசமாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். உண்மைதான். எல்லா பொருட்களுமே பிளாஸ்டிக் உறைகளிலேயே வருவதால் குப்பை சேர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது.
மிக நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

PPattian : புபட்டியன் said...

நன்றி உமா.. உங்கள் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்துக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

மங்களூர் சிவாவுக்கு ரிப்பீட்டு

:)

PPattian : புபட்டியன் said...

ரிப்பீட்டுக்கு நன்றி எம்.எம்.அப்துல்லா :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் சிறப்பான பதிவு

PPattian : புபட்டியன் said...

மிக்க நன்றி பனித்துளி சங்கர்..

இசையும் இதயமும் கலந்த உங்கள் புரோபைல் பெயர் அழகா இருக்கு..

அஹமது இர்ஷாத் said...

Nice article... Thanks For sharing...

PPattian : புபட்டியன் said...

நன்றி அஹமது இர்ஷாத்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் ”அருமை”

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

மார்கண்டேயன் said...

வீணான பிளாஸ்டிக் குப்பைகள் மூலம், பாரத நாட்டிலும் எரிபொருள் தயாரிக்கிறார்கள், கீழே உள்ள வலைத்தொடர்பு மூலம் அறியலாம் . . .
http://www.indiacar.com/infobank/Plastic_fuel.asp

கமலேஷ் said...

மிகவும் கருத்துள்ள ஒரு பதிவு...முடிந்தவ வரை நாங்களும் முயற்சி செய்கிறோம்....உங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

PPattian : புபட்டியன் said...

மார்கண்டேயன் அவர்களே

பயனுள்ள தகவலுக்கு ஒரு சிறப்பு நன்றி. அந்த கட்டுரையைப் படித்தேன். இந்த வரிகள் கவலையைத் தந்தது

//According to a 2003 Central Pollution Control Board study, of the over 10,000 metric tons of plastic waste, including industrial and imported plastic waste, generated daily in our country, only 40 per cent is recycled. The rest just lies there, poisoning the environment. //

ஆனால், இந்த வரிகள் மகிழ்ச்சி தருகிறது

//A few municipal bodies, including the BrihanMumbai Municipal Corporations, are looking to set up pilot projects with the Zadgaonkars//

மிக்க நன்றி

PPattian : புபட்டியன் said...

நன்றி க.நா.சாந்தி லெட்சுமணன்

நன்றி ஸ்வாமி ஓம்சைக்கிள்

நன்றி கமலேஷ்

thenammailakshmanan said...

திடீரென்று சந்நியாசம் பூண்டு சென்னையில் இருந்து திருச்சி வரை தண்டவாளம் அருகே கால் நடையாய் நடந்து அந்த பிளாஸ்டிக் குப்பை எல்லாம் அகற்றலாமா என்றெல்லாம் நினைத்ததுண்டு//

எனக்கும் இதுபோல் எண்ணங்கள் ஏற்பட்டது உண்டு பட்டியன்..வெல் செட்... அருமையான இடுகை,,,

அப்போவெல்லாம் மலேஷியா சிங்கப்புரில் உள்ள உறவினர்கள் கொண்டு வரும் பைக்கு மவுசு அதிகம்.. இப்போ வீடு பூரா பையாகி அலற வேண்டி இருக்கு..!!!

மார்கண்டேயன் said...

புபட்டியன் அவர்களுக்கு,
பாரத நாட்டினைப் பொறுத்தவரை, நல்ல முயற்ச்சிகள் எல்லாம் மிக மெதுவாக, ஆனால் குறையின்றி நடைபெறுவது வலிமையான விஷயம்,
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வாசுதேவன் அவர்கள், வீணான பிளாஸ்டிக் பைகளை சாலை அமைப்பதில் உபயோகித்து வெற்றி கண்டுள்ளார்,
விஞ்ஞானி சட்கோங்கர் அவர்கள் எண்ணெய் முதலாளிகளின் எதிர்ப்பினை மீறி தங்கள் தொழிசாலையை செயல்படுத்துவதே மிகப்பெரிய வெற்றி தான்.
இருப்பினும், அவ்வாறு கிடைக்கும் எரிபொருள் இன்னும் பரவலாக கிடைப்பதில்லை என்பதே உண்மை. காலம் கனியும் என்று நம்புவோமாக !

எனது கிறுக்கல்கள் said...

கவிதை கதைகள் என்ற பார்வையில் இருந்து சற்றே விலகி நின்று வித்த்யாசமாக யோசித்திருக்கிறீர்கள்..
பயனுள்ள பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்

PPattian : புபட்டியன் said...

நன்றி மார்கண்டேயன் அவர்களே. உங்கள் மீள்வருகைக்கும், மேலும் பயனுள்ள தகவல்களுக்கும்.

//காலம் கனியும் என்று நம்புவோமாக //

கட்டாயமாக.. பிளாஸ்டிக்கை நாம் வெல்லும் காலம் தூரத்தில் இல்லை. அப்போது நாம் பிளாஸ்டிக்கை சரியான முறையில் பயன்படுத்தி, சரியாக மீள்சுழற்சி செய்வோம்.

PPattian : புபட்டியன் said...

நன்றி எனது கிறுக்கல்கள் வருகைக்கும் உங்கள் ஊக்கத்திற்கும்.

//வித்த்யாசமாக யோசித்திருக்கிறீர்கள்..
பயனுள்ள பதிவு நண்பரே..
//

PPattian : புபட்டியன் said...

நன்றி தேனம்மை.. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை :)

//இப்போ வீடு பூரா பையாகி அலற வேண்டி இருக்கு..!!!//

சரியாய்ச் சொன்னீங்க

மார்கண்டேயன் said...

பிளாஸ்டிக் பொருட்களை வகைப்படுத்துவது கூட சூழல் மேம்பாட்டில், இன்றியமையாத பணிதான், ஆனால் பலர் இதனை அனுபவபூர்வமாக உணர்வதில்லை, மரம் வளர்க்கத்தான் முடியவில்லை, மண்ணையாவது மாசிலிரிந்து காப்போமே., ஒரு மாதம் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து எடை போட்டுப்பார்த்தால் தெரியும் . . . நமது கடமை .,

PPattian : புபட்டியன் said...

நன்றி மார்கண்டேயன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம் தொடருங்கள்.

PPattian : புபட்டியன் said...

மிக்க நன்றி முத்துலெட்சுமி

Andrew's Blog said...

I am also doing the same the with reliance from (Using paper bags which will got it from IT companies event).

PPattian : புபட்டியன் said...

Good Andrew's Blog.

I think we all need to do it. Thanks for your visit and comments.

குடந்தை அன்புமணி said...

கீழே உள்ள வலைத்தொடர்பு மூலம் அறியலாம். . .
http://www.padukai.com/topic31852.html

குடந்தை அன்புமணி said...

கீழே உள்ள வலைத்தொடர்பு மூலம் அறியலாம். . .http://www.chenaitamilulaa.net/t26043-topic