ஊரப்பாக்கம் டீக்கடை நிறுத்தத்தில் நின்றது பேருந்து. முட்டி மோதிக்கொண்டு ஏறியவர்களை உட்கார்ந்தபடியே நோட்டம் விட்டான் அவன். தினம் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்தே ஆக வேண்டும் என்று தலையில் எழுதப்பட்ட அவன் பெயர் பசுபதி. எழுபது வயது மதிக்கத்தக்க கிழம் ஒன்று கடைசியாக ஏறியது. நிற்கக் கூட முடியவில்லை. பசுபதியை ஏக்கமாகப் பார்த்தது. தலையைத் திருப்பிக் கொண்டான் அவன். பக்கத்தில் அமர்ந்திருந்த கம்பளி மீசை, பச்சை சட்டைக் காரர் தடாலென்று எழுந்து இடம் கொடுத்தார். ஏமாளி!
"சீக்கிரம் ஏறும்மா.. தம்பி படியில் நிக்காதப்பா.. மேல வா", என்றபடி விசிலை கடித்தார் நடத்துனர்.
கிழம் அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டது. பசுபதிக்கு தேவாரம் சொல்லிக் கொடுத்து பக்திப்பழமாக்க முயன்ற ராமசாமித் தாத்தா ஞாபகத்தில் வந்தார். “சொற்றுணை வேதியன் சோதி வானவன்..” ம்ம்ம். சற்று ஓரக்கண்ணால் கிழத்தை நோட்டம் விட்டான். கிழம் அழுக்கான ஒரு சட்டையும், கந்தலான ஒரு முழுக்கால்சட்டையும் அணிந்திருந்தது. அதன் இரண்டு கைகளிலும் பச்சைக் குத்தி இருந்தது. ஒரு கையில் ஏதோ ஒரு விசித்திரமான உருவமும், வலது கையில் சில எழுத்துக்கள்… வார்த்தையாக. கடினமான அந்த வார்த்தை மீது அவன் நாட்டம் அதிகரித்தது. அவனுக்கு இந்த பைத்தியம் இருக்கிறது. டீ-ஷர்ட் வாசகம் முதல் நோட்டீஸ் போர்ட் வரை கண்ணுக்கு தெரிவது எல்லாவற்றையும் படிக்க முயற்சிக்கும் ஒரு பித்து.
ஒரு காலத்தில் மிக அழகாக இருந்திருக்கும் அந்த பச்சை, இப்போது தோல் சுருக்கத்தினால் அரைகுறையாகத் தெரிந்தது. கல்வெட்டுக்களின் கிரந்த எழுத்துக்களை போல இருந்தது. பெங்களூரு செல்லும்போதெல்லாம் பார்த்து ரசிக்கும் ஜிலேபி எழுத்துக்களைப் போல.. தீவிரமாகப் படிக்க முயன்றான். ம்..ஹூம்.. ஒண்ணும் புரியலை. கிழம் சற்றென்று அவனைத் திரும்பிப் பார்த்தது.
"என் லவ்வர் பேரு", என்றது கரகரத்த சன்னமான குரல்.
பசுபதி இதை எதிர்பார்க்கவில்லை. கிழம் பேசும் என்று மட்டுமில்லை, லவ்வர் என்ற வார்த்தை இது போன்ற கிழத்தின் வாயில் இருந்து… சிரித்துக் கொண்டான்.
"பச்ச குத்திக்கற அளவுக்கு அவ்ளோ லவ்வா", கண் அடிப்பது போல சிமிட்டினான்.
"ஆமாப்பா, என்னையே சுத்தி சுத்தி வருவா.. நானும் அப்டிதான்.. கண்மூடித்தனமான்னு சொல்வாய்ங்க இல்ல.. அதேதான்"
அடேங்கப்பா, இப்ப எங்க இருக்காங்க?"
கிழம் சற்றே கலங்கிய கண்களுடன் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தது, "உயிரோட இல்ல..."
"கூடுவாஞ்சேரி எல்லாம் எறங்கிக்க", என்று கூவினார் நடத்துனர்.
சில நொடிகள் மௌனத்துக்குப் பின் கிழமே வாய் திறந்தது, "தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போய்ட்டா... படுபாவி".
பசுபதிக்குத் திகீரென்றது.. "அய்யோ”, கொஞ்சம் சத்தமாகவே.. கம்பளி மீசை, பச்சை சட்டை அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தது.
வெளியில் வெயில் சுளீர் என்றிருந்தது. GST சாலையின் அனல் எல்லாம் பறந்து பயணிகள் முகத்தைப் பதம் பார்த்தது. "ஸ்..." என்றது கிழம். சுருங்கிய தோல் மேலும் சுருங்கியது. பசுபதி கைக்குட்டையால் முன் வழுக்கையைத் துடைத்துக் கொண்டான்.
"கல்யாணத்துக்கு அப்புறம் இறந்துட்டாங்களா", கிழத்துக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த காலேஜ் பையன் கேட்டான்.
"அவளை நான் கண்ணாளமே பண்ணிக்கல"
"ஏங்க?"
"எங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல... பெரிய சண்டைக்கு அப்புறமும் குடும்பத்துல ரொம்ப தொல்லையா இருந்தது..”, கிழம் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது, “அதான் நான் சொந்தத்துலயே கண்ணாளம் பண்ணிக்கிட்டேன்"
கொஞ்ச நேரத்துக்குப்பின் கிழமே தொடர்ந்தது, "நான் கண்ணாளம் பண்ண நாலாம் நாளே அவ தூக்கில தொங்கிட்டா.. என்ன மாதிரியே அவளும் வேற யாரையாவது கட்டிக்கிட்டு வாழ்ந்திருக்கலாம்.. போனவ என் வாழ்க்கையையும் சேத்து கெடுத்துட்டுப் போய்ட்டா.."
பொத்தேரி SRM நிறுத்தம் வந்தது. "வறேங்க..இன்னொரு நாளைக்கு உங்களைப் பாத்தா, கன்டினியூ பண்ணலாம்", அந்த கல்லூரி மாணவன் அரை மனதுடன் இறங்கிக் கொண்டான். பசுபதி கிழத்தைப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன. அதற்கு காது கொடுக்கும் ஒரு ஆள் மட்டும் தான் தேவை போலிருந்தது.
அவனைப் பார்த்து தொடர்ந்தது கிழம், "ஆமா.. அவ சாகும்போது ஒரு கடதாசி எழுதி வச்சுட்டுப் போய்ட்டா.. அவங்கூர் முழுக்க எங்க கத தெரிஞ்சிப் போய்ரிச்சு"
"அதனால உன் வீட்டுல ப்ரச்சினையா?",
"இல்ல.. ராஜம்மா தூக்கு மாட்டிக்கிட்டது என் வீட்டில அவளுக்குத் அப்போ தெரியாது.. ஆனா, இந்த பச்சையைப் பாக்கும்போதெல்லாம் அவ எங்கூட சண்டபோடுவா.. நெதம் சச்சரவுதான். இந்த கருமத்த அழச்சுத் தொலன்னு சத்தம் போடுவா..". கிழம் நிறுத்திக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தது.
பசுபதி கிழத்தின் கையை கவனித்தான். கொஞ்சம் கொஞ்சமாக “V.RAJAMMA” என்று எழுதியிருந்ததை டீகோட் செய்ய முடிந்தது.
"இங்லீஷ்ல எல்லாம் எழுதியிருக்கு", கொஞ்சம் கிண்டலாகவே கேட்டான்.
“ம்.. நான் அப்ப டிகிரி படிச்சிக்கிட்டிருந்தேன்... ராஜம்மாவும்தான்.. ஐ கேன் ஸ்பீக் வெரி குட் இங்கிலீஷ்"
சுத்தம்.. "நீ டெக்னாலஜி எல்லாம் நல்லா கத்துக்கிட்டிருக்க.. ஆனா, கம்பெனியில மேல மேல போகணும்னா உன் இங்லீஷை நீ இம்ப்ரூவ் பண்ணியே ஆகணும்.. யுவர் கம்யூனிகேஷன் இஸ் வெரி புவர்.. இந்த காலத்தில இங்லீஷ் கோர்வையா பேசக் கூடத் தெரியாம டிகிரி முடிச்சிட்டு வந்துட்றாங்கப்பா..", பசுபதியின் மேலாளர் தலை மேல் மேகம் போட்டு வந்து அலுத்துக் கொண்டார். அவனுக்கு கொஞ்சமா தாழ்வு மனப்பான்மை எட்டிப் பார்த்தது.
“ராஜம்மா அவ்ளோ அழகா இருக்க மாட்டா... கருப்பா, சன்னமா இருப்பா.. ஆனா இனிக்க இனிக்க பேசுவா.. லொட லொடன்னு பேசிட்டே இருப்பா. அவளும் நானும் பல மணி நேரம் ஒண்ணா இருப்போம்.. ஆனா, நா ஒண்ணு ரெண்டு வார்த்தைதான் பேசிருப்பேன்.. அவதான் பேசிட்டே இருப்பா..”, கிழத்தின் காய்ந்து போன இதழ்களில் ஒரு புன்னகை படர்ந்து மறைந்தது, “அப்போல்லாம் எங்க கனவு பூராவுமே நல்லாப் படிச்சு, கண்ணாளம் கட்டிட்டு காரு, பங்களான்னு வசதியா வாழணுங்கறதுதான்.. எல்லாமே கெட்டுப்போச்சி”
வண்டி சிவானந்த குருகுலம் தாண்டியிருந்தது. "கண்ட்கர் சார், கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க" என்றாள் கையில் கட்டப் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பேரிளம்பெண். "போம்மா.. உனக்கெல்லம் வேற வேல இல்லயா.. டீலக்ஸ் பஸ்ஸில ஏறிக்கிட்டு கண்ட எடத்துலயும் நிறுத்தச் சொல்லுவியா?.."
“டிகிரி முடிக்க மொதல்லயே எங்க லவ்வு வீட்ல தெரிஞ்சி போனதால படிப்பும் பாதியில நின்னு போச்சி.. ராஜம்மாவுக்குந்தான். அவசர அவசரமா எனக்கு கண்ணாளம் நடந்திச்சி… ஆனா, என் வீட்டில அவ ரொம்ப அழகா இருப்பா.. சுண்டினா ரத்தம் வரும்பாங்கல்ல.. அதான். காரு, பங்களா எல்லாம் இருந்தது..”
“எப்டி.. அதுக்குள்ள அவ்ளோ சம்பாதிச்சியா?”
“இல்ல.. எல்லாமே சீதனமா கெடச்சது..” கிழத்தின் முகத்தில் சோகத்தையும் தாண்டி கொஞ்சமாக வெட்கம் ஓடியது.. “ஆனா எல்லா சந்தோஷமும் சொற்ப காலத்திலயே முடிஞ்சிப் போச்சி.. என் வீட்டில அவ எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிகிட்டு வீணாக்கிட்டா”
"அவங்க பக்கமும் நியாயம் இருக்கில்ல.. நீ உன் லவ்வரையே நெனச்சுக்கிட்டிருந்திருப்ப.."
கிழத்தின் கண்கள் நன்றாக கலங்கியது, "எப்ப அவ கழுத்தில தாலி கட்டினனோ.. அப்பவே நான் ராஜம்மாவ என் மனசுலருந்து களைஞ்சிட்டேன்.. எனக்கு எல்லாமும் என் வீட்டுல அவதான்னு இருந்தேன்.. ஆனா அவளுக்குதான் என்மேல எப்பவுமே சந்தேகம்.. பாவி என்னையும் வாழவிடாம அவளும் வாழாம போயிட்டா" இப்போது துளிகள் சில கிழத்தின் கால்சட்டை மீது விழுந்து வட்டமாக ஈரமாக்கின. வட்டம் ஊறிப் பெரிதாகியது.
"என் வீட்டுல அவளுக்கு மயில்னா இஷ்டம்.. அதான் மயில் படத்தை இந்தக் கையில குத்திக்கிட்டேன்", இடது கையை காட்டியது கிழம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மயில் புலப்பட்டது பசுபதிக்கு. "ஆனா, இந்த மயிலை பாக்காமக் கூட போய் சேந்துட்டா அவ.." கிழத்தின் குரல் கம்மியது.
"காட்டாங்கொளத்தூர் எறங்குறது யாருப்பா", கத்தினார் நடத்துனர். படிக்கருகில் நின்றபடியே அந்த பேரிளம்பெண் இன்னும் நடத்துனரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிழம் தொடர்ந்தது, "எப்படியோ அங்க சுத்தி இங்க சுத்தி அந்த கடதாசி என் வீட்டுல அவ கையில கெடச்சிரிச்சு.. பாத்த மறு நிமிஷமே ஓடிப்போய் கிருஷ்ணாயில மேல ஊத்திக்கிட்டா.."
"அடப்பாவமே".
"என்ன கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம பத்த வச்சிக்கிட்டா...", கிழம் இருக்கையின் பக்கத்தில் இருந்த கம்பத்தில் தலையைச் சாய்த்துக் கொண்டது. அதில் தன் பின் புறத்தை வைத்து சாய்ந்து கொண்டிருந்த இளைஞன் சற்றென்று நகர்ந்து கொண்டான்.
"அந்த கடதாசியையும் அவகூடவே சேத்து எரிச்சிட்டா.. பாவி..பாவி"
"அதுக்கப்புறம்?"
"கொஞ்ச நாள் பைத்தியம் போல திரிஞ்சேன்.. என் அம்மாவையும் அப்பாவையும் சுத்தமா ஒதுக்கிட்டேன்.. எனக்கு இப்படி ஆன கவலையில என் அம்மாவும், அப்பாவும் அடுத்தடுத்து போய் சேந்திரிச்சிங்க.. என் அம்மா என்ன இன்னொரு கண்ணாளம் பண்ணிக்க வக்க ரொம்பவே சிரமப்பட்டுச்சு... நான் எதுக்குமே அசையலை"
பேருந்து மறைமலை நகர் அடைந்திருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகியிருந்தன. வழக்கமாக இப்படி ஆகும்போது பசுபதி எழுந்து தனக்கென தனியாக ஒரு இருக்கை தேடிக் கொள்வது வழக்கம். இப்போது அப்படி செய்ய மனம் வரவில்லை.
"இப்ப என்ன பண்றீங்க?", என்றான்
"சிங்கம் பெருமாள் கோயில்ல ஒரு அப்பார்ட்மென்ட்டில வாட்ச் மேனா இருக்கேன்"
வெயில் சற்றும் குறையவில்லை.. அனல் முகத்தைப் பதம் பார்த்தது. பசுபதி ஏதும் பேசவில்லை. கிழமும் எதுவுமே பேசவில்லை. ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்திருந்தது.
வண்டி ஓடிக் கொண்டே இருந்தது.
"எஸ்ப்பி.. கோயில்", என்று கத்தினார் நடத்துனர். கிழம் மெதுவாக எழுந்தது..
ஏதோ சட்டென்று ஞாபகம் வந்தவனாக, "ஆமா.. அந்த லட்டர்.. அதுல ஒன்னப்.... ஒங்களப்பத்தி அப்டி என்னதான் இருந்துச்சி?, என்றான்.
"அதத் தெரிஞ்சிக்கத்தானே தனிக்கட்டயா உசுரப் புடிச்சிக்கிட்டு அம்பது வருஷமா காலந் தள்ளிக்கிட்டுருக்கேன்...எத்தனயோ பேர தேடித் தேடிப் போயி கேட்டுப் பாத்துட்டேன்.. யாருக்குமே விவரம் தெரியல..", கையை விரித்தபடி பேசிக் கொண்டே நகர்ந்தது கிழம்.
"யோவ் பெருசு.. சீக்கிரம் வாய்யா.. மொதல்லயே எந்திரிச்சி வரத்துக்கென்ன"
மெதுவாக படிகளில் இறங்கி மறைந்து போனது கிழம்.
-----------------------
இது வம்சி சிறுகதைப் போட்டிக்கான எனது முயற்சி


0 comments:
Post a Comment